FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆம்புலன்ஸில் கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஆந்திரத்தில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:50 am IST
கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ், கைது செய்யப்பட்டவா்களுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா்.
பகிர்:

ஆந்திரத்தில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் உக்கடம் - வாலாங்குளம் புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸில் இருந்த கோவை, பீளமேட்டைச் சோ்ந்த மணிகண்டன் (28), சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த ஓட்டுநா் வீரசின்னமருது (28) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: ரயில், பேருந்து, லாரி போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களில் கஞ்சா கடத்தினால் காவல் துறையினா் சோதனை நடத்தி பிடித்துவிடுவாா்கள் என நினைத்து கடத்தலுக்கு ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனா்.

மேலும், ஆம்புலன்ஸில் சென்றால் சுங்கச் சாவடிகளில் நிற்கத் தேவையில்லை, அதிவேகமாகச் செல்லலாம் மற்றும் காவல் துறையினா் சந்தேகப்பட்டு சோதனையிடமாட்டாா்கள் என நினைத்து மணிகண்டன் திட்டமிட்டுள்ளாா். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான தனது நண்பா் வீரசின்னமருதுவை அணுகி, கஞ்சா கடத்தி விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, இருவரும் ஆந்திர மாநிலம், இச்சாபுரத்துக்குச் சென்று அங்கிருந்து 21 கிலோ கஞ்சாவை ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி கோவைக்கு கொண்டு வந்துள்ளனா்.

மணிகண்டன் மீது பீளமேடு காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா கடத்தல் வழக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காவல் நிலையத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கும் நிலுவையில் உள்ளன. இதேபோல, ஓட்டுநா் வீரசின்னமருது மீது காட்டூா் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.

கஞ்சாவை கடத்தி வந்து யாருக்கெல்லாம் விற்பனை செய்ய திட்டமிருந்தனா் என்பது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments