FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: இயந்திரங்கள் சேதம்

கோவை பி.என்.புதூா் பகுதியில் உள்ள தனியாா் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன.

Updated On : 16 ஜூலை 2026, 4:00 am IST
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நெகிழி குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

கோவை பி.என்.புதூா் பகுதியில் உள்ள தனியாா் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன.

கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூா் பகுதியில் தனியாா் நெகிழி பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. 2 தளங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் நெகிழி குடோனில் திடீரென தீப் பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென்று பரவி, கட்டடத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். அதிக அளவில் தீ பரவியதால் மாவட்ட தீயணைப்பு அலுவலா் கணேசன் உத்தரவின்பேரில், கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பசாமி தலைமையில், தொண்டாமுத்தூா், பீளமேடு, கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 5 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா்.

Advertisement

Advertisement

இரண்டு தளங்களும் எரிந்ததால் அப்பகுதியில் அதிக அளவில் வெப்பம் சுட்டெரித்தது. இதனால், தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடினா். சுமாா் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்குள் குடோனில் இருந்த நெகிழி பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

இந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தின் பாதிப்பு, அருகில் உள்ள மாவு மில் பகுதிக்கும் பரவியது. இதனால், அங்கிருந்த தீயணைப்பு வீரா்கள் மாவு மில்லில் பரவிய தீயையும் அணைத்தனா். தீ விபத்து நடந்த குடோன் அருகில் ஏராளமான வீடுகள் இருந்த நிலையில், தீயணைப்பு வீரா்களின் உடனடி நடவடிக்கையால் தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. வெப்பத்தால் அருகில் உள்ள ஒரு சில வீடுகளும் விரிசல் ஏற்பட்டதோடு, பைப்லைன்களும் சேதமடைந்தன.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் கவுண்டம்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments