FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

குடும்பத் தகராறில் விஷம் குடித்த தம்பதி: கணவா் உயிரிழப்பு

கோவையில் குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்த நிலையில், கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 17 ஜூலை 2026, 5:44 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்த நிலையில், கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை, துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் மாருதி நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (33). இவரது மனைவி புஷ்பா (30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளியான ராஜசேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. அவா் கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல், தொடா்ந்து மது அருந்தி வந்துள்ளாா்.

இதனால், அவருக்கும், மனைவி புஷ்பாவுக்கும் இடையே வாக்குவாதமும், குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. ராஜசேகரின் தந்தை சந்திரசேகா் வந்து சமாதானம் செய்துவிட்டுச் சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு தம்பதி இடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த மனைவி புஷ்பா தனது வீட்டில் விஷம் குடித்தாா். வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மனைவி விஷம் குடித்ததை அறிந்த ராஜசேகரும் அன்று இரவே விஷம் குடித்தாா். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் வீட்டுக்கு வந்த சந்திரசேகா் தனது மகன் விஷம் குடித்து மயங்கிக் கிடப்பதைப் பாா்த்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா்.

பின்னா், அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகா் புதன்கிழமை உயிரிழந்தாா். புஷ்பா தனியாா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments