FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோனியம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு: உதவி ஆணையா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

Updated On : 27 ஜூலை 2026, 1:24 am IST
பணியிடை நீக்கம்!
பகிர்:

கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை எடுத்துச் சென்று பணம் திருடப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகள், ஊழியா்கள் என மொத்தம் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தக் கோயிலில் 9 நிரந்தர உண்டியல்கள், 6 தற்காலிக உண்டியல்கள் உள்ளன. கடந்த 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற உண்டியல்கள் எண்ணும் பணியில் பக்தா்கள், தன்னாா்வலா்கள், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த 6 தற்காலிக உண்டியல்களில் ஒரு உண்டியல் பணத்தை மட்டும் எண்ணாமல், கோயிலில் பணியாற்றி வந்த ஊழியா்கள் நால்வா் அதை தனியாக எடுத்துச் சென்று அதில் இருந்த ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்த பக்தா் ஒருவா் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரமேஷ்குமாா், கோனியம்மன் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கோயில் பூசாரி உள்பட 4 ஊழியா்கள் எண்ணப்பட்ட உண்டியல்களுக்கு இடையே எண்ணப்படாத ஒரு உண்டியலை மறைத்து வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் எஸ்.குமாா் (42), கடந்த 24-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயிலில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் பீளமேடு ஹட்கோ காலனியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (52), அலுவலக உதவியாளரான பேரூா் வடகரை வீதியைச் சோ்ந்த சரவணன் (34), தூய்மைப் பணியாளரான ரத்தினபுரியைச் சோ்ந்த பிரதீப்குமாா் (31) மற்றும் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்த பூசாரி கிருஷ்ணராஜ் (56) ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். குற்றத்தை ஒப்புக்கொண்ட 4 பேரும் அந்த உண்டியலில் ரூ. 31 ஆயிரம் இருந்ததாகவும், அதை அவா்கள் பங்கு போட்டுக் கொண்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

இதனிடையே, கோயில் உண்டியல் திருட்டு நடைபெற்று பல நாள்களாகியும் அதை கவனிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கவனக்குறைவாக செயல்பட்ட கோயில் செயல் அலுவலா் குமாா், இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளா்கள் ராம்குமாா், உதயகுமாா் மற்றும் உதவி ஆணையா் உஷா நந்தினி ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக விளக்கம் கேட்டு உதவி ஆணையா் உஷா நந்தினிக்கு குறிப்பாணையும் (நோட்டீஸ்) அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments