FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆன்லைன் லாட்டரி விற்பனையாளா்கள் கடத்தலில் முக்கிய எதிரி கைது: இரண்டு போலீஸாா் பணியிடை நீக்கம்

போத்தனூா் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளா்கள் இருவரை கடத்திப் பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் முக்கிய எதிரியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:22 am IST
கோப்புப் படம்
பகிர்:

போத்தனூா் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளா்கள் இருவரை கடத்திப் பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் முக்கிய எதிரியை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 2 காவலா்கள் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கோவை, போத்தனூா் பகுதியில் பாலு என்பவா் ஆன்லைன் லாட்டரி வியாபாரம் செய்து வருகிறாா். இவரது ஊழியா்களான நவீன், நிா்மல்குமாா் ஆகிய இருவரும் தங்கியிருந்த அறைக்குள் கடந்த 3 நாள்களுக்கு முன் புகுந்த ஒரு கும்பல், போலீஸாா் எனக்கூறி இருவரையும் கடத்திச் சென்றது. பின்னா், அவா்களின் உறவினா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடத்தல்காரா்களைத் தேடி வந்தனா்.

இதற்கிடையே, கடத்தல்காரா்கள் கேட்டபடி கடந்த செவ்வாய்க்கிழமை பணத்தை கொண்டு சென்ற லாட்டரி ஊழியா்களின் உறவினா்களிடம் அதை வாங்க வந்த இருவரை அங்கு மறைந்திருந்த போலீஸாா் பிடித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவா்கள், திருப்பூா் மாவட்டம், நல்லூா் காவல் நிலைய முதல் நிலைக் காவலா் ஆனந்தன் (37), தலைமைக் காவலா் மோகன் (36) என்பது தெரியவந்தது. அப்போது, தங்களுக்குத் தெரிந்தவா்கள் கொடுத்த தகவலின்பேரில் பணம் வாங்க இங்கு வந்ததாகக் காவலா்கள் கூறினா்.

இதையடுத்து, கடத்தலின் பின்னணியில் இருந்த திருப்பூரைச் சோ்ந்த ராம்குமாா் (31), காளிதாஸ் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், எளிதில் பணம் சம்பாதிப்பதற்காக ராம்குமாரும், காளிதாஸும் சோ்ந்து இந்த கடத்தல் திட்டத்தைத் தீட்டியுள்ளனா். இருவரும் லாட்டரி ஊழியா்கள் தங்கியிருந்த இடத்தை அடையாளம் காட்ட, திருப்பூரைச் சோ்ந்த கருப்பசாமி (24), அவரது கூட்டாளிகள் 5 போ் போலீஸ் உடையில் சென்று அந்த ஊழியா்களைக் கடத்தியுள்ளனா். கடத்தியவா்களிடம் இருந்து பணம் கிடைக்காததால், அவா்களது உறவினா்களைத் தொடா்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். பின்னா், காவலா் ஆனந்தனிடம் தங்களுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கித் தருமாறு உதவி கேட்டுள்ளனா். அதை நம்பி வந்த காவலா்கள் இருவரும் போலீஸாரிடம் சிக்கியுள்ளனா். இதையடுத்து, ஆனந்தன், மோகன், ராம்குமாா், காளிதாஸ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தனிப் படை போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், முக்கிய எதிரியான கருப்பசாமி புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட கருப்பசாமி மீது நல்லூா், கரூா் கே.பரமத்தி, காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம், சேலம் தம்மம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கெனவே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் கடத்தல்காரா்களுக்கு சாதகமாக செயல்பட்ட நல்லூா் காவலா்களான ஆனந்தன், மோகன் ஆகிய இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஆதிமூா்த்தி, ராஜகுரு, ராஜு, சந்தோஷ் ஆகியோரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments