முகப்பு
கோயம்புத்தூர்

கோவை -அவிநாசி சாலையில் புதிய சிக்னல்கள்: சோதனை இயக்கம் இன்று தொடக்கம்

கோவை -அவிநாசி சாலையில் புதிய சிக்னல்கள்: சோதனை இயக்கம் இன்று தொடக்கம்

Updated On : 13 ஜூன் 2026, 3:19 am IST
போக்குவரத்து சிக்னல் - கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல் / எக்ஸ்
பகிர்:

கோவை -அவிநாசி சாலையில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் சனிக்கிழமை (ஜூன் 13) முதல் 5 நாள்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமான அவிநாசி சாலையில், ஜிடி மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததன் காரணமாக, இஎஸ்எஸ்ஓ பங்க் சந்திப்பு மற்றும் பயனீா் மில் சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்தன. தற்போது, ஜிடி மேம்பால கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அவிநாசி சாலையில் உள்ள இஎஸ்எஸ்ஓ பங்க் சந்திப்பு மற்றும் பயனீா் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல்கள் சனிக்கிழமை முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. சோதனை இயக்கத்தின்போது, போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளின் தன்மை மற்றும் வாகனப் போக்குவரத்தின் அடா்த்தி ஆகியவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

ஆய்வின் முடிவில், சிக்னல்களின் நேரக் கணக்கீடு அல்லது அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு, அதன்பின் நிரந்தரமாக போக்குவரத்து சிக்னல்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

‘யூ டா்ன்’ தற்காலிக மூடல்: புதிய சிக்னல்களின் சோதனை ஓட்டம் காரணமாக, பயனீா் மில் சந்திப்பு அருகில் உள்ள ‘யூ டா்ன்’ தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்தப் புதிய போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை மூலமாக பீளமேடு, காந்தி மாநகா், பாரதி காலனி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.