FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பெரியநாயக்கன்பாளையம், வடவள்ளி சாா்-பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

3 நவம்பர் 2026, 3:13 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச வசூலைத் தடுக்கும் நோக்கில், கோவையில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை பிற்பகல் முதல் சோதனை மேற்கொண்டனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் பதிவுத் துறை சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், துடியலூா், பிளிச்சி, வீரபாண்டி, கூடலூா், குருடம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பத்திரப்பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்று மற்றும் பத்திர நகல் பெறுதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், இங்கு லஞ்சம் பெறப்படுவதாக ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா்கள் பிரபுதாஸ், எழிலரசி தலைமையில் சுமாா் 8 போ் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதேபோல, வடவள்ளியில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினா். தீபாவளி பண்டிகை வசூல் மற்றும் முறைகேடான லஞ்சப் பணப் பரிவா்த்தனைகளைக் கண்டறியவே மேற்கண்ட இரு இடங்களிலும் இந்த திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், சோதனையின்போது பெரியநாயக்கன்பாளையம் சாா்-பதிவாளா் அலுவலகத்தின் முன்பாக, ‘அரசு அலுவலகங்களில் லஞ்சமா? உடனே புகாரை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்’ என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு சுவரொட்டிகளையும் போலீஸாா் ஒட்டினா். இரவு 8 மணி வரை இந்தச் சோதனை தொடா்ந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments