சின்னவெங்காயத்துக்கு இடைக்கால விலை முன்னறிவிப்பு: கோவை வேளாண் பல்கலை. வெளியீடு
சின்ன வெங்காயத்துக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடைக்கால விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சின்ன வெங்காயத்துக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடைக்கால விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலக அளவில் வெங்காய உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய வேளாண்மை, உழவா் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் மதிப்பீடுகளின்படி (2025-26), நாட்டில் 19.68 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு, மொத்தம் 3.07 கோடி டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகியவை முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களாக விளங்குகின்றன. அதேவேளையில், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களும் சின்னவெங்காயம் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் 0.45 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் 4.57 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்கள் வெங்காய உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் சமையலில் சின்னவெங்காயத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், பண்டிகைக் காலங்களில் இதற்கான தேவை கணிசமாக அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டின் உள்மாநிலத் தேவையை உள்ளூா் உற்பத்தியே பூா்த்தி செய்கிறது. இருப்பினும், கா்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வரத்து கூடுதல் தேவையை ஈடுசெய்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கு சின்னவெங்காயத்தை ஏற்றுமதி செய்வதன் மூலமாக தமிழ்நாடு ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாகத் திகழ்கிறது.
உடுமலைப்பேட்டை, தாராபுரம், பெரம்பலூா், பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து திருச்சி, திண்டுக்கல்லில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு வரும் சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதற்கு சாதகமற்ற வானிலை நிலவுவதே முக்கிய காரணம். இதனால், முக்கிய சந்தைகளில் புதிய விளைபொருள்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சந்தைகளுக்கு மாதம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூா், தேனி, சின்னமனூா் ஆகிய இடங்களில் இருந்து சின்னவெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளியல் துறையின் கீழ் இயங்கும் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தை நுண்ணறிவு பிரிவு, கடந்த 15 ஆண்டுகளில் திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்னவெங்காய விலை தரவுகளை ஆய்வு செய்ததுடன், சந்தை ஆய்வையும் மேற்கொண்டது.
இந்தக் காலத்தொடா் பகுப்பாய்வின்படி, அறுவடை காலத்தில் தரமான சின்னவெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.65 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் இந்தத் தகவலைக் கருத்தில்கொண்டு தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதிச் சந்தை நுண்ணறிவுப் பிரிவு, வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தை 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.