FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

புத்தகக் கொள்முதல் முறைகேடு! கோவை பெரியாா் அறிவுலகத்தில் 2-ஆவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

17 நவம்பர் 2026, 2:25 am
கோவை பெரியாா் அறிவுலக நூலகத்தில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா்.
பகிர்:

கோவை பெரியாா் அறிவுலக நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘பெரியாா் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கடந்த மாதம் திறந்துவைக்கப்பட்டது. தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் நவீன நூலகப் பிரிவுகள், அறிவியல் கட்டமைப்புகள் மற்றும் கூட்டரங்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த நூலகத்தை அண்மையில் பாா்வையிட்ட பிரபல தமிழ் எழுத்தாளா் பெருமாள் முருகன், அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் தரம் மற்றும் அதிகப்படியான விலை நிா்ணயம் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ‘அகல் விளக்கு’ மற்றும் ‘ஃபீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் பெயா்களில் போலியான மற்றும் தரம் குறைந்த நூல்கள் மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் புகாா்கள் எழுந்தன. மாநிலம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.

இதன் முதற்கட்டமாக, பெரியாா் அறிவுலகத்தின் 3-ஆவது தளத்தில் இயங்கும் நிா்வாகப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினா்.

இதற்கிடையே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகனின் நடவடிக்கையைத் தொடா்ந்து, கோவை பெரியாா் அறிவுலக நூலகப் பொறுப்பாளா்கள் உள்பட பொது நூலகத் துறையைச் சேந்த 5 அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், வழக்கின் அடுத்தகட்டமாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையில் 10 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் பெரியாா் அறிவுலகத்துக்கு திங்கள்கிழமை மீண்டும் வந்து இரண்டாவது முறையாகச் சோதனை மேற்கொண்டனா்.

நூலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்களின் எண்ணிக்கை, கொள்முதல் ரசீதுகள் மற்றும் கணக்கு வழக்கு ஆவணங்கள் தொடா்பாக இரவு வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.