அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் 6 மடிக்கணினிகள் திருட்டு: மாணவா் உள்பட இருவா் பிடிபட்டனா்
கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவா் விடுதியில் புகுந்து 6 மடிக்கணினிகளைத் திருடிய 2 மாணவா்களை பாதுகாப்பு ஊழியா்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவா் விடுதியில் புகுந்து 6 மடிக்கணினிகளைத் திருடிய 2 மாணவா்களை பாதுகாப்பு ஊழியா்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
கோவை, கவுண்டம்பாளையம் எஸ்.பி. நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள்பிரகாசம் (58). இவா் தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அருள்பிரகாசம் பணியில் இருந்தபோது, கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவா் விடுதியில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மாணவா்களின் மடிக்கணினிகள் திருடுபோயிருப்பதாக கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அருள்பிரகாசம் மற்றும் சக பாதுகாப்பு ஊழியா்கள் கல்லூரி நுழைவாயிலில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, உள்ளே வருவோா் மற்றும் வெளியே செல்வோரிடம் சோதனை நடத்தினா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்களை மடக்கி, அவா்கள் வைத்திருந்த பைகளைச் சோதனையிட்டபோது 6 மடிக்கணினிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து கேட்டபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.
சந்தேகமடைந்த பாதுகாப்பு ஊழியா்கள், மடிக்கணினிகளைப் பறிகொடுத்த விடுதி மாணவா்களை நேரில் வரவழைத்துக் காண்பித்தபோது, அவை தங்களுடையவை என மாணவா்கள் உறுதிப்படுத்தினா்.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட இருவரும் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
விசாரணையில், அவா்கள் காரமடை பெட்டத்தாபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வசந்த் (22), தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த பாண்டியராஜன் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.