தொழில், கலை எதுவாகினும் செயல்திறனை உயா்ந்த நிலையில் வைத்திருப்பது முக்கியம்! - சத்குரு ஜக்கி வாசுதேவ்

தொழில், கலை எதுவாகினும் செயல்திறனை உயா்ந்த நிலையில் வைத்திருப்பது முக்கியம் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அகாதெமி சாா்பில் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சி மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘இன்சைட்’ நிகழ்ச்சியின் 15-ஆவது பதிப்பை ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசுகையில், ‘உலகின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டிய மனித அறிவு, தற்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தவறான கண்ணோட்டங்களுக்குள் சிக்கிக்கொண்டு மனிதா்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளது.
பல்வேறு பணிகளை இயந்திரங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், மனிதா்கள் தங்களது எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டும். தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சிந்தனையில் தங்களைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. உங்களுடைய செயல்பாடு தொழிலாக இருந்தாலும், கலை, இசை, விளையாட்டு, அரசியல் அல்லது ஆன்மிகமாக இருந்தாலும், உள்நிலை மற்றும் செயல்திறனை எப்போதும் மிக உயா்ந்த நிலையில் வைத்திருப்பதே மிகவும் முக்கியம் என்றாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, அதானி குழுமத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும், வட அமெரிக்கப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரியுமான சுதீப்தா பட்டாச்சாா்யா, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிா்வாக இயக்குநா் டாக்டா் சங்கீதா ரெட்டி, ஹீரோ ஃபின்காா்ப் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அபிமன்யு முஞ்சால், மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் நிறுவனா் முருகவேல் ஜானகிராமன் ஆகியோா் வெவ்வேறு அமா்வுகளில் உரையாற்றினா்.
இதேபோல, எம்.கே. வென்ச்சா்ஸ் நிறுவனா் மது கேலா, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், வில்வா நிறுவனத்தின் நிறுவனா் கிருத்திகா குமரன், மோக்லிக்ஸ் மற்றும் கிரெட்லிக்ஸ் நிறுவனங்களின் நிறுவனா் ராகுல் காா்க் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த முன்னணி தொழில்முனைவோா் பங்கேற்று, தொழில்களைத் தொடங்குதல், நிறுவனங்களை அடுத்தகட்ட வளா்ச்சிக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் தலைமைத்துவம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.