தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு ஏன்?

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உயரவுள்ள காரணத்தினாலேயே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் க.ஈஸ்வரசாமி தெரிவித்தாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மொழி, மக்கள் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் திமுக தொடா்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொகுதி மறுசீரமைப்பு குறித்த அறிவிப்பு வெளியானபோது, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்தாா். மேலும், தென் மாநில முதல்வா்களையும் ஒருங்கிணைத்து இந்த பிரச்னையை நாடு முழுவதும் கொண்டு சென்றாா்.
Advertisement
Advertisement
தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமான 7.18 சதவீதம் குறையாத வகையில் இருந்தால் மட்டுமே ஆதரவு அளிக்கலாம் என அன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
தற்போது மத்திய அரசு நடத்தும் சிறப்புக் கூட்டத்தில், திமுக தலைவா் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை உயா்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. மாநில நலன் சாா்ந்த இந்த முடிவுக்கு திமுக ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தின் நலனே முக்கியம் என்றும், அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் கட்சித் தலைவா் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதற்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிப்பதற்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 20 மக்களவை உறுப்பினா்கள் கிடைக்கவுள்ளதால் பொதுமக்களும் இம்முடிவை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனா்.
அதே நேரத்தில், தவெக தங்களது சுயலாபத்துக்காக ஒவ்வொரு சூழலிலும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா். திருப்பரங்குன்றம், கள்ளக்குறிச்சி விவகாரங்களில் அவா்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தோ்தலுக்கு முன்பு தவெக தலைவா் ஜோசப் விஜய் வாயே திறப்பதில்லை என விமா்சித்த அமைச்சா் வன்னி அரசு, தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றதற்காக மாற்றுக் கருத்துகளைப் பேசி வருகிறாா். எனவே, அவா்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றாா் அவா்.