முகப்பு

திமுக எம்பிக்கள் அமித் ஷாவைச் சந்தித்தது ஏன்? கனிமொழி விளக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்பிக்கள் சந்தித்தது பற்றி...

26 வினாடிகள் முன்பு
திமுக எம்பிக்கள் அமித் ஷாவைச் சந்தித்தது ஏன்? கனிமொழி விளக்கம்!
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்பிக்கள் சந்தித்தது ஏன் என கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை சிறப்புக் கூட்டத்தொடர் நவ. 30 அன்று தொடங்கப்படவுள்ளது. இதில், அரசியலமைப்பு (132-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்களுக்கான திருத்த மசோதா என 3 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தனர்.

சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்பிக்களுடைய கூட்டத்தை நடத்தி அதற்குப் பிறகு ஒரு தீர்மானத்தை வெளியிட்டார். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் வரவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரிலே இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக முடிவெடுத்திருக்கிறோம்.

அதையொட்டி, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. திமுக எம்பிக்கள் 5 பேர் உள்துறை அமைச்சரைச் சந்தித்து எங்களுடைய தீர்மானத்தைப் பற்றி அவரிடம் தெரிவித்துவிட்டு வந்தோம்” என்றார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது பற்றிப் பேசிய கனிமொழி, “சென்ற முறை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

50% தொகுதிகள் அதிகரிப்பு என்பது மசோதாவில் இல்லை. 50% அதிகரிப்பு என்பதை உள்துறை அமைச்சர் பேசுகையில் சொன்னாரே எழுத்துப்பூர்வமாக தரப்படவில்லை.

தமிழ்நாட்டிற்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 50% தொகுதிகள் அதிகரிப்பின்றி நேரடியாக மசோதா கொண்டுவரப்பட்டிருந்தால் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை 39-ல் இருந்து 32-ஆகக் குறைந்திருக்கும்.

தமிழ்நாட்டுக்கு அது மிகப்பெரிய பாதிப்பைக் கொடுத்திருக்கும். தமிழ்நாடு மட்டுமின்றி, தென் மாநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கும். பலர் எம்பி-க்களை இழந்திருப்பார்கள். அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தோம்.

அதில், 50% அதிகரிப்பு என்றாலுமே நமக்கு பெரியளவில் அதிகரித்திருக்காது. 48 தொகுதிகளாக மாறியிருக்கும்.

ஆனால் இப்பொழுது 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான 50% தொகுதிகளை அதிகரித்துத் தருகிறோம் என்று திமுகவின் நிலைப்பாட்டை இன்று மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மசோதாவைக் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதன்படி, தமிழ்நாட்டுக்கு 59 எம்பிக்கள் தற்போது கிடைப்பார்கள். இதன்மூலம், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து தென் மாநிலங்களுக்காகவும், பாதிக்கப்படக்கூடிய அத்தனை மாநிலங்களுடைய உரிமைகளையும் பெற்றுத் தந்திருக்கும் ஒரு மகிழ்ச்சியுடன் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இந்த மசோதாவை தோற்கடித்தால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அடுத்தாண்டு தமிழகத்திற்கும் மற்ற தென் மாநிலங்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும். அதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க திமுக முடிவெடுத்து இந்த முடிவை நாங்கள் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

summary

Why did DMK MPs meet Amit Shah? Kanimozhi explains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.