வேலைவாய்ப்பு, மேம்பாட்டுத் திட்ட பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும்: அமித் ஷா
வேலைவாய்ப்பு, மேம்பாட்டுத் திட்ட பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும் என அமித் ஷா பேசியிருப்பது குறித்து...

வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கியில்,தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12-ஆவது பட்டாலியன் வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்து பேசினார்.
அப்போது, இந்த புதிய வளாகம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தயார்நிலை மற்றும் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
வடகிழக்கு பிராந்தியம் இயற்கை பேரிடர்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என்று குறிப்பிட்ட அமித் ஷா, இந்த பட்டாலியன் அருணாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திற்கும் மற்றும் அண்டை பகுதிகளுக்கும் சேவை செய்யும். பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துதல், பொருளாதாரச் சுயசார்பை ஊக்குவித்தல் மற்றும் சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவை அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியில் முக்கியமான முன்னுரிமைகளாக இருக்கும் என்று அமித் ஷா கூறினார்.
மேலும், இட்டாநகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நீச்சல் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளத்தை இலவசமாகத் திறந்து வைக்க எடுத்த தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநரின் முடிவை அமித் ஷா பாராட்டினார்.
முன்னதாக, இட்டாநகரில் உள்ள டோர்ஜி காண்டு மாநில மாநாட்டு மையத்தில், 'அருணாச்சலப் பிரதேச கூட்டுறவு தொலைநோக்கு ஆவணம் 2027'-ஐ அமித் ஷா வெளியிட்டார்; மேலும் 'சரஸ் மேளா' கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர், அருணாச்சலப் பிரதேச விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யுமாறு ராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த முயற்சி உள்ளூர் விவசாயிகளுக்குச் சிறந்த சந்தை வாய்ப்புகளையும் நிதி நன்மைகளையும் வழங்குவதோடு, பாதுகாப்புப் படையினருக்குத் தரமான பொருள்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும் என்று அவர் கூறினார். இத்தகைய முன்னெடுப்புகள் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுயசார்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், 'சுவாலம்பன் யோஜனா' போன்ற திட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மாநிலமும் நாடும் முன்னேற வேண்டும் என்று கூறினார். வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டார்.