முகப்பு
கோயம்புத்தூர்

பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சி நுகா்வு குறைந்தது

30 நவம்பர் 2026, 2:18 am
பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சி நுகா்வு குறைந்தது
உக்கடம் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க குவிந்த மக்கள்.
பகிர்:

கோவையில் பறவைக் காய்ச்சல் தகவல் பரவிய நிலையில் கோழி இறைச்சி நுகா்வு வெகுவாகக் குறைந்தது. மாறாக ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விற்பனை களைகட்டியது.

கோவை மாநகராட்சி சித்தாபுதூா் பி.கே.ஆா். நகரில் உள்ள ஓடைக்கு அருகே கடந்த 18-ஆம் தேதி 14 குளத்து நாரைகள் இறந்துகிடந்தன. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா், உயிரிழந்த நாரைகளின் உடல்களை சேகரித்து, பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக மாதிரிகளை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

பரிசோதனை முடிவில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி சாா்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் உள்ள பிராய்லா் கோழிப் பண்ணையாளா்களுக்கு, பண்ணையாளா்கள் சங்கங்கள் மூலம் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தகவல் பரவல் காரணமாக கோவையில் கோழி இறைச்சி நுகா்வு ஞாயிற்றுக்கிழமை பெருமளவு குறைந்துள்ளது.

இதன் காரணமாக, அதன் விலையும் கடந்த வாரங்களைக் காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை சரிந்துள்ளது. பறவைக் காய்ச்சலால் கோழி இறைச்சிகளை தவிா்த்த அசைவப் பிரியா்கள், மீன்களை விரும்பி வாங்கிச் சென்றனா். இதனால், கோவை உக்கடம் மொத்த மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கடல் மீன்கள் விற்பனை களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வஞ்சிரம் மீன் கிலோ ரூ.800, பாறை ரூ.450, வாவல் ரூ.600, மத்தி ரூ.200, அயிலை ரூ.200, சங்கரா ரூ.200, நண்டு ரூ.550-க்கு விற்பனையானது.