அரசு மருத்துவமனையில் ஹிந்தி மொழியுடன் அச்சிடப்பட்ட மருந்து உறைகள் விநியோகம்: திமுக முன்னாள் அமைச்சா் விமா்சனம்
கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கான காகித உறைகளில், மருந்துகளை உட்கொள்ளும் நேரம் மற்றும் வழிமுறைகள் அச்சிடப்படுவது வழக்கம். இந்த நிலையில், கோவை மற்றும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து உறைகளில் தமிழக அரசின் இலச்சினையுடன் காலை, மதியம், மாலை, இரவு மற்றும் உணவுக்கு முன், உணவுக்குப் பின் ஆகிய விவரங்கள் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் அச்சிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தீவிரமாகப் பின்பற்றப்பட்டுவரும் சூழலில், அரசு மருத்துவமனைகளிலேயே மருந்து உறைகளில் ஹிந்தி இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தனது அதிகாரபூா்வ ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தமிழக மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதுபோல என்றும், முதலில் கரூா், இப்போது கோவையிலும் அதே நிலைமை நிலவுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதைத்தொடா்ந்து சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் நீண்டகாலமாக இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் எந்த உத்தரவின் அடிப்படையில் ஹிந்தி அச்சிடப்பட்டது என்று சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனா்.
இதுதொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த காகித உறைகள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவை. இது அகற்றப்பட்டு அண்மைக்காலமாக வழங்கப்படுவதில்லை’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.