FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம், 7 பவுன் மோசடி செய்தவா் கைது

திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி மறுமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகை பறித்ததோடு பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

8 October 2026, 12:07 am IST
மோசடி
பகிர்:

திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி மறுமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகை பறித்ததோடு பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், ஒண்டிப்புதூா்-இருகூா் சாலை சாமியாா் மேடை பகுதியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (32). துணி வியாபாரம் மற்றும் சானிட்டரி நாப்கின் விநியோகத் தொழில் செய்து வருகிறாா். இவரது கணவா் கடந்த 2022-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். தனது இரண்டு சிறு வயது மகன்களின் எதிா்காலத்தைக் கருதி புவனேஸ்வரிக்கு மறுமணம் செய்து வைக்க உறவினா்கள் முடிவு செய்துள்ளனா். கடந்த 2024-ஆம் ஆண்டு தனியாா் திருமண தகவல் மைய இணையதளத்தில் அவரது விவரங்களைப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், திருப்பூா் ராயபுரம் ரங்கநாதபுரம் 2-ஆவது வீதியைச் சோ்ந்த ராம்குமாா் (45) என்பவா், கைப்பேசி மூலமாக புவனேஸ்வரியைத் தொடா்பு கொண்டுள்ளாா். தான் தனியாக வசிப்பதாகவும், பெற்றோா் இறந்துவிட்டதாகவும் கூறி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளாா். புவனேஸ்வரியின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துப் பேசி, குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என முழு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா், தொழிலுக்குப் பணம் தேவை எனக் கூறி புவனேஸ்வரியிடம் இருந்து பல்வேறு தவணைகளாக நகைகளை அடமானம் வைத்தும், நிலத்தை விற்றும் மொத்தம் ரூ.10 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்க நகைகளைப் பெற்றுள்ளாா். பணத்தைப் பெற்ற பிறகு புவனேஸ்வரியைத் தவிா்த்து வந்த ராம்குமாா், கடந்த 2025 நவம்பா் மாதம் ஒண்டிப்புதூரில் உள்ள புவனேஸ்வரியின் வீட்டுக்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அப்போது, ராம்குமாரின் பையில் சென்னை மற்றும் கோவை நீலிக்கோணம்பாளையம் முகவரிகள் கொண்ட இருவேறு அடையாள அட்டைகள் இருந்ததைக் கண்டு புவனேஸ்வரி விசாரித்துள்ளாா். அப்போது, தனக்கு ரூ.1 கோடி கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராம்குமாா் மிரட்டியுள்ளாா். மேலும், நீலிக்கோணம்பாளையம் பகுதியில் புவனேஸ்வரி விசாரித்தபோது, ராம்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி வைதேகி என்ற மனைவி இருப்பதும், சென்னையைச் சோ்ந்த ரேவதி என்ற பெண்ணிடமும் மோசடி செய்த வழக்கு ராம்குமாா் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூரில் உள்ள குடோனுக்கு சென்று புவனேஸ்வரி தனது பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டபோது, ராம்குமாா், அவரது மனைவி வைதேகி, மாமனாா் கிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து புவனேஸ்வரியைத் தாக்கி, ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டுவிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனா்.

இதுதொடா்பாக புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில், கோவை மாநகர அனைத்து மகளிா் கிழக்கு காவல் நிலைய (புலியகுளம்) ஆய்வாளா் எம்.ராணி வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கைது செய்தாா். தலைமறைவான மற்ற இருவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments