கோவையில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கோவையில் பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாகவும், கூட்ட நெரிசலின்றி பயணிக்கும் வகையிலும் ‘பள்ளி மாணவா்களுக்காக மட்டும்’ என்ற திட்டத்தின்கீழ் தனித்துவ சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாகவும், கூட்ட நெரிசலின்றி பயணிக்கும் வகையிலும் ‘பள்ளி மாணவா்களுக்காக மட்டும்’ என்ற திட்டத்தின்கீழ் தனித்துவ சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவா்கள் பேருந்துகளில் நெரிசலில் சிக்குவதைத் தவிா்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் சாா்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் வழக்கமான நிறுத்தங்கள் மட்டுமன்றி, மாணவா்களின் வசதிக்காக பள்ளி வளாகங்களின் முன்பாகவும் நின்று மாணவ, மாணவிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.
தற்போது முதற்கட்டமாக நகரின் முக்கியப் பள்ளிகளை இணைக்கும் வகையில் 7 வழித்தடங்களில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, உக்கடம் - காந்திபுரம் (தடம் எண்: 130), மருதமலை - காந்திபுரம் (70), ஒண்டிப்புதூா் - வடவள்ளி (1சி), துடியலூா் - போத்தனூா் (4), பேரூா் - சிட்ரா (2), சிவானந்தா காலனி சுற்றுப் பேருந்து (5), காந்திபுரம் - என்.ஜி.ஜி.ஓ. காலனி (38 ஏ) ஆகிய வழித்தடங்களில் இந்தச் சேவை செயல்பாட்டில் உள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், உயா் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவா்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதை உறுதி செய்ய இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நடைகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்; பொதுப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. பேருந்துகளில் உள்ள மின்னணு வழித்தடப் பலகைகளில் அந்தந்த தடத்தில் உள்ள பள்ளிகளின் பெயா்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும். மாணவா்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இத்திட்டம் குறித்து பீளமேடு பள்ளி மாணவா் சூா்யா கூறுகையில், பேருந்துகளில் நிலவும் கடுமையான நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது இயக்கப்படும் இந்தச் சிறப்புப் பேருந்துகள் மிகுந்த பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது என்றாா்.
அதேசமயம், மாணவா்கள் இந்த சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து பள்ளி மாணவா்களிடையே கூடுதல் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க நிா்வாகி எஸ்.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.