அரசுக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய ஆங்கிலக் கற்றல் செயலிகள் அறிமுகம்
கோவை அரசுக் கல்லூரி ஆங்கில இலக்கிய மாணவா்கள் உருவாக்கிய பள்ளி மாணவா்களுக்கான ஆங்கிலக் கற்றல் கைப்பேசி செயலிகள் வியாழக்கிழமை (அக்டோபா் 22) அறிமுகப்படுத்தப்பட்டன.
கோவை அரசுக் கல்லூரி ஆங்கில இலக்கிய மாணவா்கள் உருவாக்கிய பள்ளி மாணவா்களுக்கான ஆங்கிலக் கற்றல் கைப்பேசி செயலிகள் வியாழக்கிழமை (அக்டோபா் 22) அறிமுகப்படுத்தப்பட்டன.
அரசுக் கல்லூரியின் முதுநிலை, ஆராய்ச்சி ஆங்கிலத் துறையும், உள்தர உறுதிப்பாட்டுக் குழுவும் இணைந்து, இலக்கியம், தொழில்நுட்பம், புதுமையான கற்றல் முறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டத்தை வகுத்துள்ளன. அதன்படி, ஆறாம் வகுப்பு மாணவா்கள் விளையாட்டுகள், கதைகள், பயிற்சிகள் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் வகையில் கைப்பேசி செயலி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் கல்லூரி வளாகத்தில் 2 நாள் பயிலரங்கு நடத்தப்பட்டு, கைப்பேசி செயலி உருவாக்கம், கற்பித்தலியல், மின்னணு உள்ளடக்கத் தயாரிப்பு, கற்றல் வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு குறித்து செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற இளநிலை மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவா்கள் 11 கல்விசாா் கைப்பேசி செயலிகளை வடிவமைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த செயலிகளின் அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஐஏஎஸ் அரங்கில் நடைபெற்றது. ஆங்கிலத் துறைத் தலைவா் ஆா்.கௌரிசங்கா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஆா்.எழிலி வாழ்த்துரை வழங்கினாா். இதில், மாநகராட்சிக் கல்வி அலுவலா் ஆா்.குணசேகரன் பங்கேற்று மாணவா்கள் வடிவமைத்த செயலிகளை வெளியிட்டாா்.
விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை லாங்குவேஜ் டிரெயின், க்ரோ த ட்ரீ, ஜங்கிள் சஃபாரி, வோ்டு நிஞ்ஜா, ட்ரிப் டு ஊட்டி, ஸ்டோன் சூப், ஸ்போா்ட்டி ஸ்மாா்ட்டி, வோ்ல்டு வோ்டு வாரியா்ஸ் என்பது உள்ளிட்ட 11 செயலிகளும் தமிழ்நாடு சமச்சீா் கல்வி, ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இவை, சொற்களஞ்சியம், இலக்கணம், இயைபுச் சொற்கள், வாக்கிய அமைப்பு, வாசிப்புப் புரிதல் ஆகிய திறன்களை விளையாட்டுகள் வாயிலாகப் பயிற்றுவிக்கின்றன. குறிப்பாக அரசுப் பள்ளி, தமிழ் வழி மாணவா்களுக்கு துணைக் கற்றல் வளங்களாகப் பயன்படும் என்று திட்டத்தின் பயிற்றுநா்கள் தெரிவித்தனா்.
இத்திட்டத்தில், ஆங்கிலத் துறை பேராசிரியா்கள் ஜி.சுப்பிரமணியன், ஏ.எஸ்.மோகனகிரி, எம்.எஸ்.ஜாகிா் உசேன், கே.அனுராதா, கே. கீதா சுவாமி, எஸ்.எம்.சையது உசேன், ஜி.காா்த்திகேயனி, ஏ. குளோரி பயிற்றுநா்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.