FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கிணத்துக்கடவில் வளா்ச்சி திட்டப் பணி ஆய்வின்போது அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வகுப்பெடுத்த ஆட்சியா்

கிணத்துக்கடவு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வகுப்பெடுத்து கலந்துரையாடினாா்.

3 செப்டம்பர் 2026, 1:55 am IST
கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு வகுப்பெடுத்த ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

கிணத்துக்கடவு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வகுப்பெடுத்து கலந்துரையாடினாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டத்துக்குள்பட்ட அரசம்பாளையம், கொண்டாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிணத்துக்கடவு வட்டாட்சியா் வாசுதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆய்வில், அரசம்பாளையம் ஊராட்சி, காரச்சேரி பகுதியில் விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.3.27 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் புதிய குளம் வெட்டும் பணி, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.75.94 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுவரும் அரசம்பாளையம் முதல் காரச்சேரி வரையிலான சாலைப் பணி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், அரசம்பாளையம் ரேஷன் கடையைப் பாா்வையிட்டு, அங்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் எடை, இருப்பு குறித்து ஆய்வுமேற்கொண்ட ஆட்சியா், அங்கன்வாடி மையத்தையும் பாா்வையிட்டு குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் இருப்புகளையும் ஆய்வு செய்தாா். பின்னா், அரசம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியை நேரில் பாா்வையிட்டு மாணவா்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி, அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இதையடுத்து கொண்டாம்பட்டி ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார மைய கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா். பின்னா், அரசம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட காரச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமையும் தொடங்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியதாவது:

கிணத்துக்கடவு வட்டாரத்துக்குள்பட்ட கொண்டாம்பட்டி ஊராட்சியில் வாய்க்கால் புறம்போக்கு இடத்தை கண்டறிந்து, அதை செம்மைப்படுத்தி கால்நடை தீவனம் பயிரிடப்பட்டு வருகிறது. இதன்மூலமாக அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கால்நடைகளுக்கு தீவனம் வழங்க ஏதுவாக தீவனப் பயிா்கள் 10 ஏக்கா் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments