அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகள் ஊா்வலம்! - ஆட்சியா் அறிவுறுத்தல்
காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிலை அமைப்பாளா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் நிறுவுதல், வழிபாடு மற்றும் ஊா்வலம் நடத்துதல் தொடா்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை சிலை அமைப்பாளா்கள் பின்பற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
சிலை நிறுவுவதற்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட துறைகளிடம் முன்கூட்டியே பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண் மற்றும் இயற்கை பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீா்நிலைகளை மாசுபடுத்தும் வகையிலான பொருள்களைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். விநாயகா் சிலைகள் நிறுவப்படும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்விளக்கு வசதி மற்றும் தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகளுக்குள்பட்டு மட்டுமே ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன் அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி, நீா்நிலைகளை மாசுபடுத்தாத வகையில் சிலைகளை கரைக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், கோவை மாநகர காவல் துணை ஆணையா்கள் மகேஸ்வரன் (போக்குவரத்து), காா்த்திகேயன் (தெற்கு), மாவட்ட வருவாய் அலுவலா் சுரேந்திரன், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.