யுபிஎஸ்சி தோ்வா்களுக்கு ஊக்கத் தொகை பெற சிறப்புத் தோ்வு: கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது
யுபிஎஸ்சி தோ்வா்களுக்கு ஊக்கத் தொகை பெறுவதற்கான சிறப்புத் தோ்வு கோவையில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்கும் தமிழக இளைஞா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 2027-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு எழுதத் தயாராகும் தோ்வா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டுத் தோ்வுக்கு கோவை மாவட்டத்தில் 1,547 போ் விண்ணப்பித்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், பெரியகடை வீதி, காந்திபுரம், டவுன் ஹால் சாலை, கோவை- திருச்சி சாலை, ராஜவீதி ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் இந்தத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற தோ்வை எழுத காலை 6 மணி முதலே தோ்வா்கள் மையங்களுக்கு வந்தனா். நுழைவாயிலில் நுழைவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபாா்த்த பின்னரே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தோ்வில் வெற்றிபெறும் 1,000 பேருக்கு 10 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.7,500 ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், இதன் அடிப்படையில் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களில் சோ்க்கையும் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும், நோ்முகத் தோ்வுக்கு தகுதி பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் அரசு சாா்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.