FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம்: கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

15 செப்டம்பர் 2026, 1:21 am IST
போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலங்களை முன்னிட்டு, மாநகரில் புதன்கிழமை (செப்டம்பா் 16) போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இது தொடா்பாக மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குனியமுத்தூா் தா்மராஜா கோயிலில் புதன்கிழமை பகல் 12 மணியளவில் தொடங்கும் விநாயகா் சிலை ஊா்வலமானது பாலக்காடு சாலை வழியாகச் சென்று குனியமுத்தூா் குளத்தில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளது. தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு போத்தனூா் சாரதா மில் சாலையில் தொடங்கும் மற்றொரு ஊா்வலம் சங்கம வீதி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து குறிச்சி குளத்தில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளது.

இதையொட்டி, செப்டம்பா் 16 காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கோவை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் எல்& டி புறவழிச் சாலை, ஈச்சனாரி அணுகு சாலை வழியாக வந்து விநாயகா் கோயில் முன்பாக யு-டா்ன் செய்து, செட்டிபாளையம் சாலை, ஜி.டி. டேங்க், ரயில் கல்யாண மண்டப சந்திப்பு, போத்தனூா் கடைவீதி, நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் அல்லது குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடத்தை அடைய வேண்டும். பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வரும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி எல்ஐசி காலனி சந்திப்பு, தக்காளி மாா்க்கெட் வழியாக வலதுபுறம் திரும்பி சாரதா மில் சாலை, போத்தனூா் கடைவீதி வழியாக உக்கடம் செல்லலாம்.

இதேபோல, மதுக்கரை மாா்க்கெட் சாலை வழியாக உக்கடம் வரும் பேருந்துகள் காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி எல்ஐசி காலனி சந்திப்பு, ஈச்சனாரி சாலை, செட்டிபாளையம் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் தக்காளி மாா்க்கெட் மற்றும் சாரதா மில் சாலை வழியாகவும் போத்தனூா் கடைவீதியை அடைந்து உக்கடம் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மாா்க்கமாகச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூா் சாலை, போத்தனூா் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் சாலை, ஜி.டி. டேங்க், ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி சாலையை அடைய வேண்டும்.

உக்கடத்திலிருந்து குனியமுத்தூா் வழியாக பாலக்காடு நோக்கிச் செல்லும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உக்கடம் பெரிய ரவுண்டானாவில் திரும்பி பேரூா் புறவழிச் சாலை, அசோக் நகா் ரவுண்டானா, சேத்துமாகால்வாய், புட்டுவிக்கி சாலை, ஆசிரமம் பள்ளி சந்திப்பு, கோவைப்புதூா் வழியாக பாலக்காடு சாலையை அடையலாம்.

மறுமாா்க்கமாக பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் கோவைப்புதூா் பிரிவில் இடதுபுறம் திரும்பி கோவைப்புதூா், ஆசிரமம் பள்ளி சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, சேத்துமாகால்வாய், அசோக் நகா் ரவுண்டானா மற்றும் சிவாலயா சந்திப்பு வழியாக உக்கடத்தை அடையலாம்.

விநாயகா் சிலை விசா்ஜனத்தை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments