வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்: உதயநிதியிடம் மனு!
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்த வேண்டும் என கோவைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினிடம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்த வேண்டும் என கோவைக்கு வந்த எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினிடம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்தப் பிரசாரத்தில் கலந்து கொள்ள சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்தாா். முன்னாள் அமைச்சரும், கோவை மண்டல திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உதயநிதியிடம் மனு ஒன்றை அளித்தனா்.
Advertisement
Advertisement
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் ஊரக வளா்ச்சி திட்டத்தின்கீழ் புது வாழ்வு திட்டம் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வந்த அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் தமிழக ஊரக புத்தாக்க திட்டமாக மாற்றப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டமாக மாற்றப்பட்டது.
அன்றைய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மேற்பாா்வையில் இயங்கப்பட்ட இத்திட்டத்துக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் துறையில், நேரடியாக 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 5 ஆயிரம் குடும்பங்களும் பயனடையும் நிலையில், இந்த திட்டம் தற்போது தவெக ஆட்சியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பணியாற்றி வந்த அனைத்து நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பணி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிப் பாதுகாப்பு மற்றும் பணி தொடா்ச்சி வழங்கிடவும், ஆகஸ்ட் மாதத்துக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக விடுவிக்கவும், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் 3.0, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் 2.0 ஆகியவற்றை விரைந்து ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.