குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சி, செல்லிக்கவுண்டனூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், 3 கி.மீ. தொலைவுக்குச் சென்று குடிநீா் பிடித்து வரும் நிலை உள்ளது. இதுகுறித்து, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க கிளைத் தலைவா் சுப்பிரமணியம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சங்கத்தின் வட்டச் செயலாளா் கண்ணன், தலைவா் எஸ்.மாணிக்கம், தவெக மாவட்ட பொறுப்பாளா் அரவிந்தன், பொறியாளா் அணி ஒருங்கிணைப்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முதல்கட்டமாக 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிராமத்தில் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி மூலம் ஆக.28-ஆம் தேதிக்குள் தடையின்றி குடிநீா் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். இதனால், 5 மணி நேரமாக நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.