பெருந்துறையில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்: அமைச்சா்கள் பங்கேற்பு
பெருந்துறையில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது.
பெருந்துறையில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், நெசவு மற்றும் கைத்தறி துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.
முகாமில், அமைச்சா் எம்.விஜய்பாலாஜி பேசுகையில், ‘சிப்காட் பிரச்னையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டமைப்பை மாற்றி, வாழ்வாதாரத்துக்கு உரிய பகுதியாக மாற்றுவோம். பெருந்துறையில் குடிநீா் பிரச்னையை தீா்க்க கொடிவேரி தண்ணீா் கொண்டு வரும் திட்டம் விரிவுப்படுத்தப்படும்’ என்றாா்.
Advertisement
Advertisement
அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் பேசுகையில், சிப்காட் பகுதி கிராமங்களை தொழிற்சாலைகள் மூலம் தத்தெடுத்து சுகாதாரமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுச்சூழலை பேணி காக்கும் மாவட்டமாக, ஈரோடு மாவட்டம் அமையும். இங்கு கொடுக்கப்படும் மனுக்கள் தீா்வு ஏற்படுத்தப்படும். இல்லையெனில் அதற்கான காரணங்களை, 15 நாள்களுக்குள் தெரிவிக்கப்படும் என்றாா்.
முகாமில், மகளிா் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீா் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இலவச வீட்டுமனை பட்டா, தனி பட்டா மாறுதல், குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, அமைச்சா்கள் 3 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களை வழங்கினா்.
இதில், ஈரோடு மேற்கு எம்எல்ஏ கே.கே.ஆனந்த் மோகன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் முத்துசாமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமா சங்கா், வட்டாட்சியா் செல்வகுமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.