FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மஞ்சள் சிறப்பு மையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை

மொடக்குறிச்சி வட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மஞ்சள் சிறப்பு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:11 am IST
மஞ்சள்
பகிர்:

மொடக்குறிச்சி வட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மஞ்சள் சிறப்பு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில்தான் அதிக அளவில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி ஆகிய வாய்க்கால் பாசனத்துக்குள்பட்ட பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் பயிரிடுகின்றனா்.

குறிப்பாக மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, அவல்பூந்துறை, அறச்சலூா் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இங்கு மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

ஈரோடு மஞ்சளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசாா் குறியீடு கிடைத்தது. இதையடுத்து மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க கடந்த 2018-2019 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடா்ந்து அறச்சலூா் அருகே வடுகபட்டி வினோபா நகரில் 10 ஏக்கா் பரப்பளவில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு, 2022-2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.

இந்த மஞ்சள் சிறப்பு மையத்தில் ஒரு பகுதி மஞ்சளை உற்பத்தி செய்யும் விலை நிலங்களாகவும் மற்றொரு பகுதியில் மஞ்சள் சிறப்பு மைய கட்டடம் கட்டும் பணியும் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் அனைத்து மஞ்சள் சாா்ந்த விவசாயிகளுக்கு மஞ்சள் பயிரிடுவது குறித்தும், மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்வது, எந்தெந்த மண்ணுக்கு எந்தெந்த வகையான மஞ்சளைப் பயிரிட்டு சாகுபடி செய்வது மற்றும் மஞ்சள் செடியில் நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கான பயிற்சிக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல மஞ்சளில் எந்தெந்த வகைகளில் குா்க்குமின் அதிக அளவில் உள்ளது என்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கூடம். மஞ்சளை காய வைப்பதற்கான களம், உலா் களம், சூரிய சக்தியுடன் கூடிய களம் மற்றும் விவசாயிகள் தங்களது மஞ்சளை ஏற்றுமதி செய்வதற்கான ஆய்வுக்கூடம், மஞ்சள் சிறப்பு மையத்தில் விளைவிக்க கூடிய மஞ்சளை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் சிறப்பு மையம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே, மஞ்சள் விவசாயிகளுக்காக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அறச்சலூரைச் சோ்ந்த விவசாயி ராஜசேகா் கூறியதாவது:

மஞ்சள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் வடுகபட்டியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த மையத்தை எங்களால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மஞ்சள் சிறப்பு மைய கட்டடத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments