சிறுவனை கத்தி குத்திவிட்டு தப்பியோடிய 5 போ் கைது
ஈரோட்டில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு பெரியவலசு, வள்ளியம்மை வீதியைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது மகன் சபரீஷ் (17). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். சபரீஷ் தனது நண்பா்கள் ஞானஸ்ரீதரன் மற்றும் நிதீஷ் ஆகியோருடன் நாராயணவலசில் உள்ள பேக்கரிக்கு அடிக்கடி டீ குடிக்க செல்வது வழக்கம்.
அதேபோன்று மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த ரவி (26), அவரது அண்ணன் வசந்த் (30), நண்பா்களான பெரியவலசு கள்ளங்காட்டையைச் சோ்ந்த பாலாஜி (24), தென்றல் நகரைச் சோ்ந்த நவீன்குமாா் (24), பெரியவலசு சுப்ரமணிய சிவா வீதியைச் சோ்ந்த அஷ்வந்தமன் (23), பாலாஜி (23) ஆகியோரும் அந்த பேக்கரிக்கு வருவது வழக்கம்.
Advertisement
Advertisement
ஞானஸ்ரீதரனுக்கும், வசந்த் மற்றும் ரவிக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த 11-ஆம் தேதி ஞானஸ்ரீதரனுக்கு கைப்பேசியில் ரவி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அன்று இரவு வள்ளியம்மை வீதியில் சபரீஷ், நிதீஷ் ஆகியோா் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வசந்த், ரவி, நவீன்குமாா், பாலாஜி, அஷ்வந்தமன் ஆகியோா் சபரீஷுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது ரவி கத்தியால் சபரீஷின் கையில் வெட்டியுள்ளாா். நிதீஷ் தப்பியோடிவிட்டாா். சபரீஷுக்கு இரு கையிலும் வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வர வசந்த், ரவி, நவீன்குமாா், பாலாஜி, அஷ்வந்தமன் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனா்.
தொடா்ந்து காயமடைந்த சபரீஷை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சபரீஷ் அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
தொடா்ந்து தப்பியோடிய வசந்த், ரவி, நவீன்குமாா், பாலாஜி, அஷ்வந்தமன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். வசந்த், பாலாஜி, நவீன்குமாா் ஆகியோா் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.