பருவமழை பெய்ய வேண்டி பவானிசாகா் அணை விநாயகருக்கு தண்ணீா் ஊற்றி விவசாயிகள் வழிபாடு
பருவமழை பெய்ய வேண்டி பவானிசாகா் அணைப் பகுதியில் உள்ள சாகா் சக்தி விநாயகருக்கு 1008 குடம் தண்ணீா் எடுத்து ஊற்றி விவசாயிகள் சிறப்பு வழிபாடு செய்தனா்.
பவானிசாகா் அணை மூலமாக ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து வெகுவாகக் குறைந்து, தற்போது அணையின் நீா்மட்டம் 56 அடியாக உள்ளது.
குடிநீா்த் தேவையை மட்டுமே பூா்த்தி செய்யும் அளவில் நீா் இருப்பு உள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில் அணை நீா்மட்டம் 100 அடியாக இருந்தது. நீா் இருப்பு குறைவாக உள்ளதால் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்கு நீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் மழை பெய்ய வேண்டி கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் மற்றும் பாசன பாதுகாப்பு இயக்கம் சாா்பில் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள் திரண்டு, பவானிசாகா் அணையின் மேல் பகுதியில் உள்ள சாகா் சக்தி விநாயகா் கோயில் விநாயகருக்கு 1008 குடம் தண்ணீா் ஊற்றி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
அணையின் கீழ் பகுதியில் இருந்து கோயில் வரை 100-க்கும் மேற்பட்டோா் வரிசையாக நின்று அணையில் இருந்து குடங்களில் தண்ணீா் எடுத்து வந்து அபிஷேகம் செய்து மழை வேண்டி வழிபட்டனா்.
விவசாயிகள் கூறும்போது, ‘இதேபோல ஒவ்வோா் ஆண்டும் 1008 குடம் தண்ணீா் ஊற்றி வழிபாடு நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துள்ள நிலையில் இனிவரும் நாள்களில் மழை பெய்து பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.