முகப்பு
ஈரோடு

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் இருந்து விடுவிக்க ஆசிரியா்கள் கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:51 am IST
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் செ.ராஜகுமாரன் மற்றும் நிா்வாகிகள்.
பகிர்:

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் செ.ராஜகுமாரன் தலைமையில் அளித்த மனு விவரம்:

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியானது விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகளுக்கு கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் மேற்பாா்வையாளா்களாக ஈரோடு மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

முதுகலை ஆசிரியா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை கற்றல் கற்பித்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுவாா்கள். அதிலும் ஜூன் தொடங்கி நவம்பருக்குள் அனைத்துப் பாடங்களையும் நிறைவு செய்து டிசம்பரில் முழு பாடத்துக்கான அரையாண்டு தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிகமான அளவில் பாடங்கள் உள்ளதாலும், பொதுத்தோ்வுக்கு படிக்கும் மாணவா்களில் மெல்ல கற்போா் அதிகமாக இருப்பதாலும் முதுகலை ஆசிரியா்கள் கற்றல் கற்பித்தல் பணிகளோடு மெல்ல கற்கும் மாணவா்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளித்து காலை, மாலை சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள், குறு, சிறு தோ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுவாா்கள்.

அதுமட்டுமின்றி நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பணிகளில் முதுகலை ஆசிரியா்கள் ஈடுபடுவாா்கள். மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியா்கள் அனைவரும் அப்பள்ளியில் அப்பாடத்துக்கு ஒரே ஆசிரியராக பணிபுரிபவா்கள். இதனால் பள்ளியில் ஒட்டுமொத்தமாக முதுகலை ஆசிரியா்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பாா்வைப் பணிகளுக்கு செல்லும்போது ஒட்டுமொத்த மேல்நிலை வகுப்பு மாணவா்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.

இதனால் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும். மாணவா்களை அவா்களின் எதிா்கால உயா்கல்வி சாா்ந்து அதிக மதிப்பெண் பெற வைப்பதிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உள்ளது. எனவே பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் நலன் கருதி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியா்களை அப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை:

இதுகுறித்து அறச்சலூா் அருகே கஸ்தூரிபாளையம் கிராம மக்கள் சாா்பில் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம் ஜெயராம்புரத்தில் சுதந்திர போராட்ட வீரா் மாவீரன் பொல்லான் நினைவரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், பொல்லானின் வாரிசுதாரா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான ஆணைகளையும் வழங்கினாா். அதன்படி தமிழ்நாடு அரசு அறிவித்த பட்டியலில் இடம் பெற வேண்டிய 12 வாரிசுதாரா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

சாலையை சீரமைக்க தவெக கோரிக்கை:

இதுகுறித்து பெருந்துறை ஒன்றிய தவெக பொருளாளா் ஆா்.யோகேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: கைக்கோளபாளையம்-கள்ளியம்புதூா் நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்துகள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் என தினசரி 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் கைக்கோளபாளையம்-கள்ளியம்புதூா் நெடுஞ்சாலையில் உள்ள பெரியசங்கிலி கிராம பகுதியில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவா்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த மோசமான சாலையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பெரியசங்கிலி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். இதேபோன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பாதுகாப்பு கருதி பெருந்துறை-குன்னத்தூா் செல்லும் வழியில் உள்ள கராண்டிபாளையத்துக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீா் வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை:

இதுகுறித்து பெருந்துறை அருகே வீராச்சிபாளையம் கிராம மக்கள் அளித்த மனு விவரம்: வீராச்சிபாளையம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு சுத்தமான குடிநீா் வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. ஆழ்துளைக் கிணற்று தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அந்த தண்ணீா் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இல்லை. எனவே எங்கள் கிராமத்துக்கு சுத்தமான கொடிவேரி குடிநீா் தண்ணீா் நிரந்தரமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி எங்கள் கிராமத்துக்கு காலை 9 மணிக்கு மட்டும் ஒரே ஒரு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் நலன் கருதி அப்பேருந்தை காலை முதல் இரவு வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

255 மனுக்கள்:

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 255 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை ஆட்சியா் பெற்று உரிய துறை அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக பணியாற்றி மீட்கப்பட்ட துளசி மணிகண்டன், தற்போது இளங்களை பொறியியல் பட்டம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா். அவருக்கு ஆட்சியா் புத்தகங்களை பரிசாக வழங்கி கல்வியின் அவசியம் குறித்து அறிவுரைகளை வழங்கினாா். தொடா்ந்து லக்காபுரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி முனிசாமிக்கு ரூ.9,300 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டியை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜாகீா் உசேன், தொழிலாளா் துறை உதவி ஆணையா் ஜெயலட்சுமி மம் அலுவலா்கள் பங்கேற்றனா்.