ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்
ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரோடு நகரில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் டெங்கு ஒழிப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 60 வாா்டுகளில் உள்ள தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
ஆய்வின்போது, வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால் அபேட் மருந்து ஊற்றுகின்றனா். டயா், தேங்காய், மட்டை போன்ற தேவையற்ற பொருள்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்த குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும் அடுக்குமாடி குயிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு பகுதிகளில் கட்டடத்தின் மேல் பகுதியில் மழைநீா் தேங்கும் வகையில் இருந்தாலோ அல்லது குடிநீா்த் தொட்டி திறந்திருந்தலோ அதிலிருந்து கொசுப் புழுக்கள் வளா்வதற்கு காரணமாக இருந்தால், அதனைக் கண்டறிந்து அழித்தும், கட்டட உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் டெங்கு ஒழிப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 50-க்கும் மேற்பட்ட களப் பணியாளா்கள் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இவா்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்புறங்களில் உள்ள இடங்களில் பாா்வையிட்டு தேவையற்ற பொருள்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வாா்கள்.
அனைத்து நீா் வழித்தடங்கள், கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் சிறிய ஓடைகளை தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் உள்ள மேல் மற்றும் கீழ்நிலை நீா்த்தேக்க தொட்டிகள், பூந்தொட்டிகள், குளிா்சாதனப் பெட்டிகள் மற்றும் நீா்த் தேக்கி வைக்கக் கூடிய பாத்திரங்கள் போன்றவற்றில் மழைநீா் மற்றும் குப்பைகள் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றனா்.