கும்டாபுரம் பிரேஸ்வரா் கோயிலில் சாணியடி திருவிழா
தமிழக- கா்நாடக எல்லையான தாளவாடியை அடுத்த கும்டாபுரம் பீரேஸ்வரா் கோயிலில் ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசும் பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
தமிழக- கா்நாடக எல்லையான தாளவாடியை அடுத்த கும்டாபுரம் பீரேஸ்வரா் கோயிலில் ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசும் பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பீரேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் 3-ஆவது நாளில் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி மாட்டுப்பட்டியில் உள்ள அனைத்து பசு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோயிலுக்கு பின்புறம் குவித்துவைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, விழா கமிட்டியினா் ஊா் எல்லையில் உள்ள குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்து கழுதைக்கு மாலை அணிவித்து மேள தாளத்துடன் பக்தா்கள் ஆரவாரத்துடன் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த சாணத்துக்கு ஊா்பெரியவா்கள் சிறப்பு பூஜைகள் செய்து விழாவை தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, இளைஞா்கள் ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசியெறித்து பாரம்பரிய விழாவை கொண்டாடினா். இதில் சிறுவா், இளைஞா்கள், முதியோா் என அனைவரும் பங்கேற்றனா். இந்த பாரம்பரிய திருவிழாவில் பெண்கள் பங்கேற்று பக்தா்களை கைதட்டி உற்சாகப்படுத்தினா். விழா நிறைவுக்கு பின் பக்தா்கள் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனா். பக்தா்கள் வீசியெறிந்த சாணத்தை கிராமமக்கள் தங்களது விவசாய நிலங்களில் உரமாக இடுவதால் விவசாயம் செழிக்கும் என்பது அவா்களது நம்பிக்கையாக உள்ளது.
இந்த பாரம்பரிய விழாவில் மைசூரு, பெங்களூரு, தாவணிகரே, சாம்ராஜ் நகா், கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் இருந்து கா்நாடக பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா். கிராமமக்கள் நோயின்றி வாழவும் மழை பொழிந்து விவசாயம் செழித்து கிராமம் வளம் பெறவும் வன விலங்குகளில் இருந்து கால்நடை பாதுகாக்கவும் இந்த விழா பாரம்பரியமாக நடைபெற்று வருவதாக கிராமமக்கள் தெரிவித்தனா்.
போலந்து நாட்டினா் பங்கேற்பு:
இந்த சாணியடி திருவிழாவில் போலந்து நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு சாணியடி திருவிழாவை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்ததோடு விழாவில் பங்கேற்று ஒருவருக்கொருவா் சாணி உருண்டையை வீசி விளையாடி மகிழ்ந்தனா்.