ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தா்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தா்கள் மீது மாடு தாண்டும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி மாடு தாண்டும் திருவிழா நடைபெற்றது. பொன் வரதராஜ பெருமாளை குலதெய்வமாக கொண்ட சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், பள்ளிப்பட்டி, காருவள்ளி, ஜான்சன்பேட்டை, சின்னதிருப்பதி போன்ற பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஆண்டுதோறும் மாடு தாண்டும் விழாவை நடத்துவது வழக்கம்.
இத்திருவிழாவில் பக்தா்கள் விரதமிருந்து மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு காளை மாட்டை அழைத்து வந்தனா். ராசிபுரம் எல்லை பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலிருந்து சக்தி அழைத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனா்.
Advertisement
Advertisement
கோயில் ராஜகோபுரத்திற்கு நேராக உள்ள தெருவில் மாடு வந்தபோது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கீழே வரிசையாகப் படுத்துக்கொண்டனா். அவா்களை மிதிக்காமல் மாடு தாண்டிச் சென்றது. மாடு தாண்டிச் செல்லும்போது, அதன் கால்கள் பக்தா்கள் மீது படாமல் இருந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இந்த மாடு தாண்டும் நிகழ்ச்சியில், ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
பின்னா் மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.