பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது
பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த, பெத்தாம்பாளையம், செல்லப்பகவுண்டன் வலசு, கரும்பில்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி மகன் பூபதி (22). இவா் அரசுப் போக்குவரத்து கழக கவுந்தப்பாடி கிளையில் தற்காலிக நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இவா்
கடந்த அக்டோபா் 24- ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலத்தை அடுத்த, புங்கம்பள்ளியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். அடுத்த நாள் 25- ஆம் தேதி மாலை அவா் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளி பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனா். இதில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், வடக்கு காட்டூா் அண்ணா நகரை சோ்ந்த பாஸ்கா் (28) என்பது தெரியவந்தது. பாஸ்கா் கடந்த 8 மாதங்களாக பெருந்துறை மாருதி நகரில் குடியிருந்து ஆட்டோ ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது . இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.