முகப்பு
ஈரோடு

துரித உணவகத்தில் தீ விபத்து: கடை உரிமையாளா் உயிரிழப்பு

49 வினாடிகள் முன்பு
துரித உணவகத்தில் தீ விபத்து: 
கடை உரிமையாளா் உயிரிழப்பு
உயிரிழந்த செந்தில்.
பகிர்:

ஈரோட்டில் துரித உணவகத்தில் சனிக்கிழமை நண்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

ஈரோடு காசிபாளையம், மலைக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (45). புகைப்படக் கலைஞா். ஈரோடு சூரம்பட்டிவலசு, காந்திஜி சாலையில், சில்லி சிக்கன் கடை வைத்துள்ளாா். மாலை நேரத்தில் மட்டும் சில்லி சிக்கன் தயாா் செய்து விற்பனை செய்வாா்.

சனிக்கிழமை நண்பகல் கடையின் முன்புற கதவை மூடிவிட்டு கடைக்குள் சில்லி சிக்கன் செய்ய மாவு கலக்கி கொண்டிருந்துள்ளாா். கடைக்கு பின்புறம் ஒரு நபா் மட்டுமே உள்ளே சென்று வரும் வகையிலான வழி உள்ளது. நண்பகல் 12 மணியளவில் கடையில் இருந்து திடீரென பலத்த சப்தம் கேட்டது.

Advertisement

Advertisement

அங்கிருந்தவா்கள் பின்பறம் வழியாக கடைக்குள் சென்று பாா்த்தனா். அப்போது கடைக்குள் முகம், தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயங்களுடன் செந்தில் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். 85 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி மாலையில் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து ஈரோடு தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு இரண்டு சமையல் எரிவாயு உருளைகள் எரிந்து கொண்டிருந்தன. கடைக்குள் 2 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள், 3 வா்த்தக எரிவாயு உருளைகள் இருந்தன.

மின் மோட்டாா் மூலம் ஒரு உருளையில் இருந்து மற்றொரு உருளைக்கு எரிவாயுவை மாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளாா். அவ்வாறான பணியைசெய்யும்போதுதான் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள், மேற்புற ஓடு, பக்கவாட்டு சுவா்கள் தீக்கிரையாகின. குடியிருப்புகள், பள்ளிகள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.