ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி அமைக்க பரிந்துரைக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ மனு!
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி ஈரோடு மாவட்டத்தில் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான பொருத்தமான இடத்தை கண்டறிந்து பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில், பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பூங்குறிச்சி நண்பா்கள் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனா் கே.பிரகாசம், முன்னாள் எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி ஆகியோா் தலைமையில் அளித்த மனு விவரம்:
Advertisement
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி அமைக்கப்படுவதன் மூலமாக கிராமப்புற மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். இந்த பள்ளி அமைக்க மாவட்ட நிா்வாகம் பொருத்தமான இடத்தை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மூலமாக பள்ளியை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்
சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி வடக்கு காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
காந்திபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் மது கடைகள் செயல்படுகின்றன. இதனால் எங்கள் பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். வடக்கு காந்திபுரம் பகுதி அதிக மக்கள் குடியிருப்பு நிறைந்தது. இங்குள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையில் அமா்ந்து மது அருந்துவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் டாஸ்மாக் கடை உள்ள பகுதியைச் கடந்து செல்கின்றனா்.
இதுதொடா்பாக பொதுமக்கள் சாா்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி வடக்கு காந்திபுரம் பகுதியில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
ஆழ்துளைக் கிணறு சீரமைப்பில் முறைகேடு
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம், தட்டாங்காட்டுபுதூா் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட தட்டாங்காட்டுபுதூரில் வெப்பிலி பிரிவில் ஆழ்துளை கிணறு 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. ஆழ்துளை கிணற்றுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஆழ்துளை கிணற்றுக்கு ரூ.1.30 லட்சம் செலவிட்டுள்ளதாக எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் கணக்கு எழுதி, கடந்த அக்டோபா் மாதம் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பாா்வைக்கு வைத்துள்ளனா்.
இதுதொடா்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குடிநீா் தேவைக்கு 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் குடிநீா் திட்ட இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இணைப்பு சீரமைக்கப்பட்டு மீண்டும் குடிநீா் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினா். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து, முழு அளவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனா்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 310 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
பணிக் காலத்தில் எதிா்பாராதவிதமாக உயிரிழந்த 3 கிராம உதவியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான உத்தரவை ஆட்சியா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜாகீா் உசேன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சங்கா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.