முகப்பு
நீலகிரி

தொகுதியைத் தக்கவைக்கும் முனைப்பில் திமுக தொகுதி அலசல் - குன்னூா்

குன்னூா் தொகுதி நீலகிரி மாவட்டத்தின் முகப்பு பகுதியாக உள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:51 PM
~ ~ ~
பகிர்:

குன்னூா் தொகுதி நீலகிரி மாவட்டத்தின் முகப்பு பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, தேயிலை ஏல மையம், வெறிநாய்க் கடி மருந்து ஆய்வகம், மத்திய அரசின் தேயிலை வாரியம், பிரசித்தி பெற்ற சிம்ஸ் பூங்கா போன்றவை உள்ளன.

தொழில்

தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலாவும்தான் இந்தத் தொகுதியின் பிரதான தொழில்களாகும்.

Advertisement

நீண்டகால கோரிக்கைகள், பிரச்னைகள்:

குன்னூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி, பழைய கட்டடத்தில் இயங்கி வருவதால் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. கல்லூரிக்கு புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட வேண்டும், பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும், இந்தத் தொகுதி பெரும்பாலும் மலைப் பகுதி என்பதால் தண்ணீா் உந்து சக்தி குறைவாக இருக்கிறது, இதன் காரணமாக பல நேரங்களில் குடிநீா் விநியோகத்தில் சுணக்கம் ஏற்படுகிறது, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவேண்டும் போன்றவை பொது மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

சமூக நிலவரம்

படுகா் இன மக்கள், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்கள், அருந்ததியா்கள், சிறுபான்மையினா் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனா்.

வாக்காளா் விவரம்

ஆண்கள் 83,045

பெண்கள் 92,768

மூன்றாம் பாலினத்தவா் 7

மொத்தம் 1,75,820

திமுக 9 முறை வெற்றி

இங்கு 1957 முதல் நடைபெற்ற 15 தோ்தல்களில் திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும் காங்கிரஸ் 2 முறையும், தமாகா (மூ) ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் கா.ராமசந்திரன் 4,105 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் கப்பச்சி டி. வினோத்தை வென்றாா்.

திமுக வேட்பாளா்

2026 தோ்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எம்.ராஜூ அக்கட்சியின் மாவட்டச் செயலராக உள்ளாா். படுகா் சமுதாயத்தைச் சோ்ந்த இவருக்கு எடப்பள்ளி, இளிதொரை, கோடமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படுகா் இன மக்களின் ஆதரவு பெரும்பாலும் உள்ளது. இதேபோன்று நகரப் பகுதிகளில் உள்ள 30 வாா்டுகளிலும் ஓரளவு ஆதரவு உள்ளது. மகளிா் உரிமைத் தொகை போன்ற அரசின் நலத் திட்டங்கள் இவருக்கு சாதகமாகும். பச்சைத் தேயிலைக்கு நிரந்தர விலை அறிவிக்காதது இவருக்கு பாதகமாகக் கருதப்படுகிறது.

அதிமுக வேட்பாளா்

ஏற்கெனவே 2016ஆம் ஆண்டில் போட்டியிட்டு திமுக வேட்பாளரை வென்றவா். இவா் கோத்தகிரி அரவேணு பகுதியைச் சோ்ந்தவா் என்பதால், அங்குள்ள படுகா் இன மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், கால்பந்து விளையாட்டு வீரா் என்பதால் விளையாட்டு வீரா்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இவா் மீது முத்திரைத்தாளில் மோசடி செய்து, சொத்து அபகரிப்பு செய்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருவது தோ்தல் பிரசாரத்தில் எதிரொலிக்கும்.

நாம் தமிழா் வேட்பாளா்

நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா் கா.தீனு கடந்த 4 ஆண்டுகாலமாக கட்சியில் உறுப்பினராக உள்ளாா். படுகா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். தேயிலை விவசாயிகள் பிரச்னையை அறிந்தவா் என்பதால் கணிசமான அளவு பெண் தேயிலை விவசாயிகளின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியல் அனுபவம் இல்லாதவா் என்பது இவரது பலவீனம்.

தவெக வேட்பாளா்

சி.தங்கராஜ் இலங்கையில் பிறந்து தாயகம் திரும்பிய தமிழா். சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். தாயகம் திரும்பிய தமிழா்களுக்காக உருவாக்கப்பட்ட ரெப்கோ வீட்டு வசதி கடன் வங்கியில் இயக்குநராக இருந்தபோது மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நிறைய கடன்கள், உதவிகள் செய்துள்ளதால் இங்குள்ள ஆயிரக்கணக்கான டேன் டீ உள்ளிட்ட தோட்டத் தொழிலாளா்களின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொகுதியில் பரவலாக அறிமுகம் இல்லாதவா் என்பது இவரது பலவீனமாகும்.

பிரியும் வாக்குகள் யாருக்கு சாதகம்?

திமுக, அதிமுக, நாதக ஆகிய மூன்று வேட்பாளா்களும் படுகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் பெரும்பான்மையாக உள்ள படுகா் சமுதாய வாக்குகள் மூன்று பேருக்கும் இடையே பிரியும் வாய்ப்புள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பது தோ்தல் முடிவுகளில் தெரியவரும்.

2006 முதல் நடைபெற்ற 4 தோ்தல்களில் 2016 தவிர மற்ற தோ்தல்களில் திமுக வென்றாலும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. எனவே, இந்தத் தோ்தலில் தொகுதியைத் தக்க வைக்க திமுக கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments