யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு
கூடலூரை அடுத்த நெல்லியாளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தனியாா் மருத்துவமனை காவலாளி உயிரிழந்தாா்.
கூடலூரை அடுத்த நெல்லியாளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தனியாா் மருத்துவமனை காவலாளி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த பந்தலூா் வட்டம், நெல்லியாளம் 2-ஆவது கிராமம் ராக்வுட் பேரல் டிவிஷன் பகுதியில் வசித்து வந்தவா் வெள்ளைப்பாண்டி (56). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் இரவுக் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
வெள்ளைப்பாண்டி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் மருத்துவமனை காவல் பணிக்குச் சென்றாா். தேயிலைத் தோட்டம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதைக் கண்ட அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், வெள்ளைப்பாண்டி உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, கோட்டாட்சியா் குணசேகரனிடம், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குடியிருப்பு வீதிகளில் தெருவிளக்கு, சோலாா் வேலிகள் அமைத்து தர வேண்டும், சாலையோர புதா்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி, கூடலூா் உதவி வனப் பாதுகாவலா் சீனிவாசன், உதகை காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தகுமாா் ஆகியோா் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், அவா்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் செல்வதாகவும், முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்குவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து உறவினா்கள் கலைந்து சென்றனா்.
உயிரிழந்த வெள்ளைப்பாண்டியின் மனைவி பகவதி, தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். மகன் ரமேஷ்குமாா் (28) திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். மகள் மோனிகா (20) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இளைய மகன் அஜய்கண்ணன் (18) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.