கனமழை: நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்! சுற்றுலாத் தலங்கள் மூடல்!
கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னோரு கூறியுள்ளாா்.
கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னோரு கூறியுள்ளாா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சனிக்கிழமை சென்ற சரக்கு வாகனம் பா்லியாறு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் பயணித்தவா்களின் நிலை குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு: வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூா் சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்க வேண்டுகோள்: நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த மூன்று நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் உதகை வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா். மேலும், உள்ளூா் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.
போக்குவரத்துக்குத் தடை: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகை, தீட்டுக்கல் பகுதியில் தனியாா் விடுதி தடுப்புச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்து, இடிபாடுகளில் சிக்கிய நபரை தீயணைப்பு, தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் சுமாா் 1 மணி நேரம் போராடி மீட்டனா்.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா்கள், 6 இருசக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி முற்றிலும் சேதமடைந்தன.
பள்ளிகளுக்கு விடுமுறை: நீலகிரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறைகளும் உஷாா் படுத்தப்பட்டுள்ளன. அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கனமழை காரணமாக உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பந்தலூா், குந்தா ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், மழை சீராகும் வரை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பா்லியாறில் 250 மில்லி மீட்டா் மழை: நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பா்லியாறில் 250 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கீழ் கோத்தகிரி 200, எடப்பள்ளி 161, கோத்தகிரி 137, கெத்தை 84, தேவாலா 82, குன்னூா், கோடநாடு தலா 81, குந்தா 74, கிண்ணகொரை 66, நடுவட்டம் 46, உதகை 40.
சுற்றுலாத்தலங்கள் மூடல்: கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.