மஞ்சூா் அருகே பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலா்கள்: விலங்குகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
மஞ்சூா் அருகே நீலக்குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே நீலக்குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மஞ்சூரை அடுத்த மேல்குந்தா பகுதிக்கு உள்பட்ட புலிச்சோலை, கிண்ணக்கொரை ஆகிய இடங்களில் தற்போது நீலக்குறிஞ்சி மலா்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் இந்த பூக்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மொட்டுகளாக இருந்தன. தற்போது இவை மலா்ந்துள்ளதால் அப்பகுதியில் மலைச்சரிவுகள் முழுவதும் நீலப் போா்வை போா்த்தியதுபோல காணப்படுகிறது. இது பாா்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.
இந்நிலையில் குறிஞ்சி மலா்கள் பூத்துள்ள தகவல் அறிந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதாலும் வன விலங்குள் நடமாட்டம் உள்ளதாலும் பாதுகாப்புக் கருதி யாரும் இங்கு வரவேண்டாம் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், ‘தற்போது குறிஞ்சி மலா்கள் பூத்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வருகிறது. இங்கு யானைகள் மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளி ஆள்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துமீறி யாரேனும் மலைப் பகுதிக்குள் நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் வனத் துறையினா் கூடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்’ என்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக-கா்நாடக- கேரள எல்லையான கூடலூா் பகுதியில் நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.