FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலை பகுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் தொடர் முறைகேடுகள்: தமிழக அரசு தடுத்து நிறுத்துமா?

உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட் டுறவு சங்கங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளைகத்

Updated On : 29 டிசம்பர் 2017, 6:46 am IST
பகிர்:

உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட் டுறவு சங்கங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளைகத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  எதிர்பார்ப்பு விவசாயிகள்,  பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
  உடுமலை வட்டத்தில் 35 ,  மடத்துக்குளம் வட்டத்தில் 21  என உடுமலை கோட் டத்தில் மொத்தம் 56 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்தக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் அரசு நலத் திட்டக் கடன், வைப்புக் கடன், பொருளீட்டுக் கடன், நகைக் கடன், மத்திய காலக் கடன், விவசாயக் கடன், பயிர் கடன், அடமான கடன் என பல்வேறு வகையான கடன்கள் குறைந்த வட்டியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடந்த சில வருடங்களாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும்,  முன்னுக்குப்பின் முரணாகக் கணக்குகள் எழுதப்பட்டு வருவதாகவும்  புகார்கள் எழுந்தன. அடமானம் வைக்கப்படும் நகைகள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு பிற கூட்டுறவு சங்கங்களில் மறு அடமானம் வைக்கப்பட்டு வருவதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 
    2014 இல் கொங்கல் நகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 10 கோடி முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க சென்னையைச் சேர்ந்த பதிவாளர் பிரான்சிஸ் ஞானசேகரன்,கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட  உயர்நிலை புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளியாகின. கூட்டுறவுக் கடன் சங்கச் செயலாளர் குணசேகரன் சுமார் ரூ.12 கோடி முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து செயலாளர் குணசேகரன், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர்.
    இதன் தொடர்ச்சியாக, உடுமலை வட்டத்தில் முக்கோணம், வேலாயுதன்கவுண்டன் புதூர், பூலாங்கிணறு, ராகல்பாவி, எரிசனம்பட்டி, மானுப்பட்டி, குரல்குட்டை, தும்பலப்பட்டி, சின்னக்குமாரபாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் பாலப்பம்பட்டி, கடத்தூர், மைவாடி, நரசிங்காபும் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள், கையாடல்கள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் இந்த சங்கங்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதில் பல்வேறு உண்மைகள் வெளியாயின.
    கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரங்களுக்குப் பெரும் உதவியாகத் திகழ்ந்து வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முறைகேடுகள், கையாடல்கள் கூட்டுறவுத் துறைக்கே பெரிய களங்கத்தை ஏற்படுத்தின.  கூட்டுறவுத் துறையின் மேல் பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கையையும் நீர்த்துப் போகச் செய்தன. இந்நிலையில்  இது குறித்து உரிய விசாரணை நடத்தி இம்மாதிரியான முறைகேடுகளைத் தடுத்து  நிறுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புக்கள், சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன் கூறியதாவது:
   உடுமலை வட்டத்தில் உள்ள பல தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் ரூ. 20 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம்  உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய சங்கச் செயலாளர்கள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    இது குறித்து சௌந்திரராஜன்(ஏஐடியூசி நிர்வாகி) கூறியதாவது:
 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு கையாடல்கள் நடந்து வருகின்றன. கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் இந்த முறைகேடுகளை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆகவே, தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  இது குறித்து உடுமலை,மடத்துக்குளம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் திருமாவளவன் கூறியதாவது:
    உடுமலை வட்டத்தில் உள்ள கொங்கல்நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.12 கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  இதை  தொடர்ந்து செயலாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செயலாளர் குணசேகரனிடம் இருந்து ரூ.2 கோடியே 75 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு  ஏலத்தில் விடப்பட உள்ளன. 
   ராகல்பாவி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.  தும்பலப்பட்டி, மானுப்பட்டி, பூலாங்கிணறு ஆகிய சங்கங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சின்னக்குமாரபாளையத்தில் ரூ.14 லட்சம் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டு, செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 
வருகிறது. 
   மேலும்,  மடத்துக்குளம் வட்டத்தில் மைவாடி, நரசிங்காபுரம், கடத்தூர் ஆகிய சங்கங்களின் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து முறைகேடாகச் சேர்த்த பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே,தவறு செய்யும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூட தயங்கமாட்டோம். முறைகேடாக சேர்த்த பணத்தையும் கட்டாயம் வசூலிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments