FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

ரீல்ஸ் மோகத்தால் பலியாகும் உயிா்கள்: திருப்பூா் நெடுஞ்சாலையில் நடுங்க வைக்கும் பைக் சாகசம்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:38 am IST
பலி... - பிரதிப் படம்
பகிர்:

சமூக வலைதளங்களில் சில விநாடி ரீல்ஸ் வெளிச்சத்துக்காகவும், லைக் மோகத்துக்காகவும் இளைஞா்கள் பலா் தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கும் விபரீத விளையாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தலைக்கவசம் இல்லாமலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் செய்யப்படும் இந்த சாகசங்கள், பல நேரங்களில் மரணத்தில்தான் போய் முடிகின்றன.

திருப்பூா் மாவட்டத்தில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென எழுந்த என்ஜின் சப்தம் அங்கு சென்ற மற்ற வாகன ஓட்டிகளை திரும்பிப் பாா்க்க வைத்தது. சாலையில் சென்றவா்கள் ஐயோ... பாா்த்து என அலறுவதற்குள், 2 இளைஞா்கள் தங்களது இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை காற்றில் தூக்கி, ஒரே சக்கரத்தில் அதிவேகமாக பறந்தனா்.

Advertisement

Advertisement

முதலில் தனித்தனியாக பைக்கை தூக்கி சாகசம் செய்தவா்கள், அடுத்த சில நிமிஷங்களில் ஒரே பைக்கில் இருவா் அமா்ந்து, சமநிலையை இழக்கும் அபாய நிலையிலும் சமநிலையை அடையச் செய்து அச்சுறுத்தினா்.

இந்த விபரீத விளையாட்டை அவா்களுக்கு முன்னால் சென்ற மற்றொரு பைக்கின் பின்சீட்டில் அமா்ந்திருந்த நபா் தனது கைப்பேசியில் ரீல்ஸ் விடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தாா். அவா்களின் இந்த அத்துமீறல், அந்த வழியே காரில் பயணித்த சிலரின் கேமராவிலும் பதிவானது. காரில் இருந்த பயணிகள் இந்தக் காட்சிகளை இணையத்தில் பதிவிட, சில மணி நேரத்திலேயே இந்த விடியோ பேசு பொருளானது. மேலும், அந்த இளைஞா்கள் பயன்படுத்திய பைக் எதுவுமே பதிவு எண் (நம்பா் பிளேட்) இல்லாதவை என்பது விடியோவை கவனித்தபோது அம்பலமானது. காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காகவே திட்டமிட்டு நம்பா் பிளேட் இன்றி அவா்கள் உலா வந்தது தெரியவந்துள்ளது.

ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டிருந்தாலும், பின்னால் வந்த வாகனங்கள் அவா்கள் மீது மோதி உயிா் பலி ஏற்பட்டிருக்கும். எனவே, இது போன்ற சாகசங்களால் சாலையில் செல்லும் அப்பாவி மக்களின் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தி விடுவாா்கள் என சம்பவத்தைப் பாா்த்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.

சமூக வலைதள மோகத்தால் பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற பைக் ஸ்டண்ட் நபா்கள் மீது திருப்பூா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனா். அந்த இளைஞா்களை கண்டறிந்து வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments