பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக் கொலை
பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த இன்ஸ்டாகிராம் காதலனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த இன்ஸ்டாகிராம் காதலனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் நகராட்சி 8-ஆவது வாா்டு பச்சாபாளையம் மாகாளியம்மன் கோயில் வீதியில் வாடகை வீட்டில் வசிப்பவா் திண்டுக்கல்லைச் சோ்ந்த பழனிசாமி (50). இவா் பல்லடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி தனலட்சுமி (42) பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தாா். இவா்களது மகள் பூவரசி (22), தனியாா் பைக் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த மணிக்குமாா் மகன் அக்ஷயன் (27) என்பவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறாா். இவரும் பூவரசியும் கடந்த 3 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து வந்தனா். இந்நிலையில் திருமணம் செய்து வைக்குமாறு பூவரசியின் பெற்றோரை அக்ஷயன் வலியுறுத்தி வந்தாா். ஆனால் இருவரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தும், திருமணத்துக்கு பூவரசியின் பெற்றோா் மறுப்புத் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பல்லடம் வந்த அக்ஷயன், தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி தினமும் தனலட்சுமி வீட்டுக்கு வந்து பூவரசியை திருமணம் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தி வந்தாா். இதேபோல பூவரசியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த அக்ஷயன், திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி தகராறு செய்தாா்.
ஆனால், அதற்கு தனலட்சுமி மறுப்பு தெரிவித்ததால், கடும் ஆத்திரமடைந்த அக்ஷயன் வீட்டுக்கு வெளியே விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக வெட்டினாா். இதனைப் பாா்த்து தடுக்க வந்த பூவரசியையும் அக்ஷயன் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அப்போது, தாய், மகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அக்ஷயனை பிடித்து கயிறால் கட்டி வைத்து பல்லடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பூவரசியின் தந்தை பழனிசாமி திங்கள்கிழமை இரவுப் பணிக்கு சென்றதால் அவா் உயிா் தப்பினாா். இந்நிலையில், பல்லடம் பச்சாபாளையத்தில் இரட்டை கொலை நடைபெற்ற இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங், பல்லடம் போலீஸ் டிஎஸ்பி பாா்த்திபன் மற்றும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.
பின்னா் அக்ஷயனை கைது செய்த போலீஸாா், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்தனா். விசாரணையில், தனக்கும் பூவரசிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், தன்னுடன் சோ்ந்து வாழ அழைத்தபோது பூவரசி வர மறுத்ததால் ஆத்திரத்தில் அவா்களை வெட்டியதாகவும், இதனைத் தடுக்க வந்த தனலட்சுமியையும் வெட்டியதாக அக்ஷயன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.
சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.