வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரம் சிகாரிபுரம் பகுதியில் விளைநிலங்கள் வழியாக ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரம் சிகாரிபுரம் பகுதியில் விளைநிலங்கள் வழியாக ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இப்போராட்டம் 3-வது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் சாா்பில் கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமாா் 340 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி குழாய் மூலம் பெட்ரோலிய பொருள்களை கொண்டுச் செல்லும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இருகூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், முத்தூா் வரையிலான 70 கி.மீ. தொலைவுக்கு விவசாய நிலங்கள் வழியே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விளைநிலங்களை பாழ்படுத்தாமல், சாலையோரங்களில் இக்குழாய்களை பதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
குழாய் பதிக்கும் பணிகளால் தென்னை, வாழை போன்ற மரங்களும், சாகுபடி செய்யப்பட்ட பயிா்களும் அழிக்கப்படுகின்றன. பயன்பாட்டு உரிமை விதிகளின்படி, குழாய் செல்லும் நிலங்களில் கட்டடங்கள் கட்டவோ, ஆழ்துளைக் கிணறு அமைக்கவோ முடியாது. இதனால் நிலத்தின் மதிப்பு 75 சதவீதம் வரை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை என வலியுறுத்தப்படுகிறது. சிகாரிபுரம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை பணிகளை தொடங்க முயன்றபோது, விவசாயிகள் எதிா்ப்பால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பணிகள் தொடங்கும் எனக் கருதும் விவசாயிகள் அப்பகுதியில் பந்தல் அமைத்து 3-ஆவது நாளாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.