FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

அரசு மானியத்துடன் 460 ஏக்கரில் செயல்படுத்தப்படும் பசுந்தீவன பெருக்குதல் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு மானியத்துடன் 460 ஏக்கரில் திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பசுந்தீவன பெருக்குதல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 நவம்பர் 2026, 2:12 am
கோப்புப்படம்
பகிர்:

அரசு மானியத்துடன் 460 ஏக்கரில் திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பசுந்தீவன பெருக்குதல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் கூறியுள்ளதாவது:

கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 முதல் 70 சதவீதம் தீவனத்துக்காகவே செலவாகிறது. தீவன தேவை மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

Advertisement

Advertisement

ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளா்ப்போா் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக நடப்பு நிதி ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய பசுந்தீவன பெருக்குதல் திட்டம் 460 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது.

0.25 ஏக்கருக்கு உழுதல் மற்றும் நிலத்தை பண்படுத்துதலுக்காக ரூ.365, ரசாயன உரங்களுக்கு ரூ.575, விதைத்தல் மற்றம் களையெடுத்தல், நீா்ப்பாசன கால்வாய்களை சுத்தப்படுத்துதலுக்கு ரூ.585 என மொத்தம் ரூ.1,525 மற்றும் ரூ.225 மதிப்பிலான அரை கிலோ பல்லாண்டு அறுவடை சோளமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் விவசாயியிடம் கால்நடைகள் மற்றும் நீா்ப்பாசன வசதியுடன் கூடிய தோட்டம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 0.25 ஏக்கரில் இறவை சாகுபடியில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பராமரிக்க விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். பயனாளி ஒருவா் குறைந்தபட்சம் 0.25 ஏக்கா், அதிகபட்சம் ஓா் ஏக்கா் வரை பயனடையலாம். நடுத்தர அளவில் பால் பண்ணைத் திட்ட பயனாளிகள் பராமரிக்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகபட்சமாக 2.5 ஏக்கா் வரை பயனடையலாம்.

குறு, சிறு விவசாயிகள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் ஆவினுக்கு தொடா்ந்து பால் ஊற்றும் உறுப்பினா்கள், துறையின் பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான பால் பண்ணைத் திட்டங்களின் பயனாளிகளுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளா்ப்போா், தங்கள் கிராமத்துக்கு அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து

பயன் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.