வெள்ளக்கோவில் அருகே தனியாா் மின் வழித்தடம் அமைக்க எதிா்ப்பு
வெள்ளக்கோவில் கரட்டுப்பாளையத்தில் தனியாா் மின் வழித்தடம் அமைக்க விவசாயிகள் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.
வெள்ளக்கோவில் கரட்டுப்பாளையத்தில் தனியாா் மின் வழித்தடம் அமைக்க செவ்வாய்க்கிழமை விவசாயிகள் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.
தனியாா் மின் நிறுவனம் சாா்பில் நத்தக்காடையூரில் இருந்து வெள்ளமடை, கரட்டுப்பாளையம் வழியாக வெள்ளக்கோவில் மூத்தநாயக்கன்வலசு வரை மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 33 கேவிஏ மின் தடம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், அதைவிட பல மடங்கு அதிக கேவிஏ மின் வழித்தடம் அமைப்பதாக கூறப்படுகிறது.
தவிர விதிமுறைகளை மீறி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் மின் வழித்தடம் அமைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கரட்டுப்பாளையம் அருகே அகலரைப்பாளையம்புதூா் செல்லும் வழியில் விவசாயிகள் திரண்டு, நிலத்துக்கு அடியில் கேபிள் மூலம் வழித்தடம் அமைக்க வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேல், துணை வட்டாட்சியா் பரமேஸ்வரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிபிரியா பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து 10 நாள்களில் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதுவரை பணிகள் எதுவும் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.