சீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!
மணாலி - லே - பிலாஸ்பூர் இடையே 489 கி.மீ. தூரத்துக்கு ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறித்து...
சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், ஹிமாசலப் பிரதேசத்தின் மணாலி, ஜம்மு காஷ்மீரின் லே ஆகியவற்றை இணைக்கும் வகையில் 489 கி.மீ. தூரத்துக்கு ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 1.31 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் உலகின் மிக உயரமான ரயில் வழித்தடத்தை அமைத்துள்ள சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் 17,244 அடி (5,256 மீட்டர்) உயரத்தில் இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதில் 270 கி.மீ. தூரம் சுரங்கத்திலேயே செல்லவுள்ளது.
நாட்டின் வடக்குப் பகுதியை மற்ற ரயில் வழித்தடங்களுடன் இணைக்கும் வகையில் மத்திய அரசு புதிய ரயில் வழித்தடத்தை அமைக்கவுள்ளது. பிலாஸ்பூர் - மணாலி - லே ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கான கணக்கெடுப்பை ரயில்வே அமைச்சகம் முடித்துவிட்டதாகவும், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான அனுமதி இதுவரை கொடுக்கப்படவில்லை.
சீனாவின் சாதனை முறியடிப்பு
ஜம்மு - காஷ்மீரில் உள்ள லடாக்கின் லே பகுதிக்கு ரயில் வழித்தடம் அமைத்தால், உலகின் மிக உயரமான ரயில் பாதையாக அது இருக்கும்.
5,256 மீட்டர் உயரத்தில் இந்த வழித்தடம் அமைக்கப்படும் என்பதால், சீனாவின் டங்குல்லா ரயில் நிலையத்தின் சாதனையை லே ரயில் நிலையம் முறியடிக்கும். கிங்காய் - திபெத் இடையே உள்ள டங்குல்லா ரயில் நிலையமே தற்போது உலகின் மிக உயரமான ரயில் நிலையமாக உள்ளது.
மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சீனாவின் டங்குல்லா ரயில் நிலையத்தை விட 188 மீட்டர் உயரத்தில் லே ரயில் நிலையம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.