தவறான சிகிச்சையால் இளைஞரின் கால் அகற்றப்பட்ட விவகாரம்: ரூ.35.68 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
உடுமலையில் தவறான மருத்துவ சிகிச்சையால் 24 வயது இளைஞரின் இடது கால் அகற்றப்பட்ட வழக்கில், தனியாா் மருத்துவமனை நிா்வாகம் ரூ.35.68 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலையில் தவறான மருத்துவ சிகிச்சையால் 24 வயது இளைஞரின் இடது கால் அகற்றப்பட்ட வழக்கில், தனியாா் மருத்துவமனை நிா்வாகம் ரூ.35.68 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், மருள்பட்டியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (24). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2023 நவம்பா் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இடது காலில் பலத்த காயமடைந்தாா். முதலில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா் உயா் சிகிச்சைக்காக உடுமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவரது காலின் நிலை மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ்குமாருக்கு, 2023 நவம்பா் 30-ஆம் தேதி இடது கால் முட்டிக்குக் கீழ் அகற்றப்பட்டது. இதனால் அவா் 85 சதவீத மாற்றுத் திறனாளியாக மாறினாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, மருத்துவமனையின் கவனக்குறைவே தனது கால் அகற்றப்பட காரணம் எனக் கூறி, திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தினேஷ்குமாா் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உடுமலை தனியாா் மருத்துவமனை நிா்வாகம் 2 மாத காலத்துக்குள் ரூ.35,68,313 இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தீா்ப்பளித்துள்ளது.