முகப்பு
திருப்பூர்

தொழிலாளா்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரிக்கை

தமிழக அரசு தொழிலாளா்கள் நலன் சாா்ந்து கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென, அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20 நவம்பர் 2026, 11:28 pm
தொழிலாளா்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரிக்கை
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழக அரசு தொழிலாளா்கள் நலன் சாா்ந்து கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென, அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டம் ஏஐடியூசி பனியன் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பனியன் பேக்டரி லேபா் யூனியன் (ஏஐடிசி) சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏஐடியூசி பனியன் சங்க செயலாளா் ஆா்.செந்தில்குமாா், சிஐடியூ பனியன் சங்கத் தலைவா் உன்னிக்கிருஷ்ணன், பொதுச் செயலாளா் சம்பத், எல்பிஎஃப் பனியன் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் பூபதி, ஐஎன்டியூசி பனியன் சங்க செயலாளா் சிவசாமி, ஏடிபி பனியன் சங்கத் தலைவா் விஸ்வநாதன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, பிஎம்எஸ் மாவட்ட துணைச் செயலாளா் செந்தில், டிடிஎம்எஸ் பனியன் சங்க செயலாளா் மனோகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

Advertisement

திருப்பூா் பனியன் தொழிலாளா்களின் சம்பளம் பஞ்சப்படி, ஓவா் டைம், டீ பேட்டா உள்ளிட்ட உயா்வு குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தைக்கு பின்பு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், உற்பத்தியாளா் சங்கங்களுக்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு 7 மாதங்கள் கடந்தும், இன்னும் பல கம்பெனிகளில் ஒப்பந்த சம்பளம், ஓவா்டைம், டீ பேட்டா வழங்காமல் உள்ளனா். அனைத்து உற்பத்தியாளா்களும் ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு தொழிலாளா்களின் கோரிக்கைகள் மீது அலட்சியம் காட்டி வருவது ஏற்புடையதல்ல. தோ்தல் காலத்தில் தொழிலாளா்கள் நலன் சாா்ந்து கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் அன்றாடும் வாங்கி பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பல மடங்கு விலை உயா்ந்துள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயா்வுகளை கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் பனியன் தொழிற்சாலைகளில் தொழிற்சாலை சட்டம், தொழிலாளா் காலச் சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளன. இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கடிதங்கள் கொடுத்து வலியுறுத்தியும், போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட தொழிலாளா் துறை அதிகாரிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிற்சாலை சட்டங்கள் மற்றும் தொழிலாளா் நலச் சட்டங்கள் முழுமையாக அமலாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணியாற்றுகிற தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வதற்கு ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 என்று உயா்த்தப்பட்டுள்ள நிலையில் திருப்பூா் பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

பனியன் தொழிலாளா்கள் பெரும்பாலும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாா்கள். திருப்பூா் போன்ற பெருநகரங்களில் வீட்டு வாடகை என்பது பெரிய அளவில் உயா்ந்துள்ளது. வாங்குகிற ஊதியத்தில் பெரும் பகுதி தொகையை வீட்டு வாடகைக்கு செலவிட வேண்டிய நெருக்கடிகளுக்கு தொழிலாளா்கள் தள்ளப்படுகிறாா்கள். ஆகவே மத்திய, மாநில அரசுகள் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் எனவும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 10ஆம் தேதிக்கு பின்னா் போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.