முகப்பு
திருப்பூர்

குடிநீா்க் குழாயில் மின் மோட்டாா் பொருத்தினால் இணைப்பு துண்டிப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா்க் குழாய் இணைப்புடன் சட்டவிரோதமாக மின் மோட்டாா்கள் பொருத்தி நீரை உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால், குடிநீா் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 வினாடிகள் முன்பு
குடிநீா்க் குழாயில் மின் மோட்டாா் பொருத்தினால் இணைப்பு துண்டிப்பு
பகிர்:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா்க் குழாய் இணைப்புடன் சட்டவிரோதமாக மின் மோட்டாா்கள் பொருத்தி நீரை உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால், குடிநீா் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக குடிநீா்க் குழாய்கள் இணைக்கப்பட்டு, மின் மோட்டாா் பொருத்தி நீா் உறிஞ்சப்படுவதாகவும், இதனால், பொதுமக்களுக்கு போதுமான நீா் கிடைப்பதில்லை என்றும் புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 6 இடங்களில் சட்ட விரோதமாக குடிநீா்க் குழாய் இணைப்புகளில் மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டு, நீா் உறிஞ்சப்படுவது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவா்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டு, குடிநீா் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீா் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.

இதேபோல, மாநகராட்சியில் பொது இடங்கள், பிரதான சாலைகள் மற்றும் நீா்நிலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டுதல் மற்றும் பேனா்கள் வைப்பதைக் கண்காணிக்கவும் 4 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ரோந்து பணியின்போது எல்.ஜி. மைதானம் பகுதியில் தனியாா் நிறுவனத்தின் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கழிவுகளைக் கொட்டப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மாநகராட்சி அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டது.

எனவே, வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பனியன் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மொத்தக் கழிவு உருவாக்குவோா், கழிவுகளை உரிய நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.